இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டம்- மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் முதற்கட்டமாக ரூ.142.16 கோடி மதிப்பீட்டில் 3510 புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முகாம்வாழ் தமிழர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முக ஸ்டாலின்
தமிழகத்தில் முகாம்களில் வாழும் 19,046 இலங்கை தமிழர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் 3,510 வீடுகள் கட்டும் திட்டத்தை ரூ.142.16 கோடி மதிப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் மேல்மொணவூரில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும் ரூ.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழகத்தில் 106 முகாம்களில் வசிக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகள் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டுத்திடலில் இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மாஸ்தான் தலைமை தாங்கினார்.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வரவேற்று பேசினார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் முதற்கட்டமாக ரூ.142.16 கோடி மதிப்பீட்டில் 3510 புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். ரூ.30 கோடி மதிப்பிலான இதர அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கான அடிக்கல் நாட்டுதல் 3 பேருக்கு உயர்த்தப்பட்ட வீதத்தில் பணக்கொடை ஆணை, 4 பேருக்கு இலவச கைத்தறி துணிகள், 2 பேருக்கு இலவச எவர் சில்வர் பாத்திரங்கள், 3 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கினார். 3 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அனுமதி சான்று மற்றும் உபகரணங்கள் வழங்கினார்.
என்ஜினீயரிங் மாணவி ஒருவருக்கு இலவச கல்விக்கான முழு கல்வி கட்டண காசோலை வழங்கினார். கல்லூரி மாணவ-மாணவிகள் 5 பேருக்கு உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகை காசோலை வழங்கினார். 13 சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதிக்கான காசோலை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, கதிர்ஆனந்த் எம்.பி., கலெக்டர் குமாரவேல்பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் அரசு செயலாளர் பொது மற்றும் நல்வாழ்வு துறை ஜகந்நாதன் நன்றி கூறினார்.
வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு மேற்பார்வையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.