இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: வேளாங்கண்ணி பேராலயத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
இலங்கை தலைநகர் கொழும்பில் தேவாலயம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலையில் தொடர்ச்சியாக 8 இடங்களில் குண்டுகள் வெடித்தது. இந்த தொடர் குண்டு வெடிப்புகள் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.அதில், 6 பேர் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தேவாலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் இலங்கைக்கு அருகில் உள்ள கோடியக்கரை கடல் பகுதி, நாகை, சாமந்தன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை சார்பாக கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
இதேபோல புதுச்சேரியில் நகரப்பகுதியில் உள்ள பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.