இமயமலையில் கால்தடம் பதித்த பிரம்மாண்ட பனிமனிதன்!
இந்திய ராணுவம் கடந்த திங்கள் அன்று பனிமனிதனின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. இந்த பனி மனிதன் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.
இமயமலையில் கால்தடம் பதித்த எட்டி பனிமனிதன் குறித்த சுவாரஸ்ய தகவல்
‘எட்டி’ எனும் பெயர் பிரம்மாண்ட பனி மனிதனை குறிக்கும் சொல்லாகும். நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் உள்ள இமயமலை பிராந்திய கிராமங்களில் எட்டியின் நடமாட்டம் குறித்து ஏகப்பட்ட செவிவழிச் செய்திகள் பல ஆண்டுகளாக உலவி வருகின்றன. 1950களில் இருந்தே மலையேறும் வீரர்கள் பனிமனிதனை பார்த்ததாக கூறி வந்தனர்.
இதுவரை யாரும் எட்டியை நேரில் பார்த்ததில்லை. 1951ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த மலையேறும் வீரர் முதன் முதலாக எட்டியின் கால் தடம் உள்ள புகைப்படத்தை வெளியிட்டார்.
எட்டி என்ற பனி மனிதன் இருப்பது உண்மை என்ற கருத்து இமயமலை பகுதிகளில் வாழும் மக்களிடம் வலுவாக உள்ளது. இதனால் எட்டியை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆய்வுகளும் 19ம் நூற்றாண்டு முதல் தொடர்ந்து வருகின்றன.
100 ஆண்டுகளாக இமயமலையின் 8000 அடிக்கு மேலே எட்டி பனிமனிதன் வாழ்வதாக கூறப்படுகிறது. மேலும் 8 முதல் 15 அடி வரை உள்ள பனிமனிதன் இன்னும் இருக்கிறான் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த எட்டி, மனிதர்களைவிட உயரமான மிகப்பெரிய ரோமங்களை கொண்டதாகும். இதன் தோற்றத்தைக் கொண்டு பிரபல ஹாலிவுட் திரைப்படமான மம்மி திரைப்படத்தின் 3வது பாகத்தில் ஒரு கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டது.
இந்நிலையில் இமயமலைத்தொடரில் உள்ள நேபாளத்தின் பிரமிட் வடிவமைப்பைக் கொண்ட மக்காலு சிகரத்தில் ராணுவ வீரர்கள் அமைத்த முகாம் அருகே எட்டி எனப்படும் பனிமனிதனின் கால் தடங்கள் கண்டறிந்ததாக தெரிகிறது.
மலையேறும் பயிற்சியில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது எட்டியின் கால் தடங்களை கண்டதாக கூறியுள்ளனர். இதன் புகைப்படங்களை இந்திய ராணுவம் டுவிட்டரில் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக பனி மனிதனின் கால்தடங்கள் என உறுதி செய்துள்ளது.
இந்த கால்தடங்கள் 32 அங்குலம் நீளமும், 15 அங்குலம் அகலமும் கொண்டுள்ளது. இந்த புகைப்படங்களை பார்க்கும்போது ஒரே ஒரு காலின் தடங்கள் மட்டுமே இருப்பதால் இது தொடர்பான சர்ச்சையும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.