Main Menu

மே 23-ந்தேதிக்கு பின்னர் நாட்டிற்கு விடிவு காலம் பிறக்கும்- மு.க.ஸ்டாலின்

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு நாட்டிற்கு விடிவு காலம் பிறக்க இருக்கிறது என்று தூத்துக்குடியில் நடந்த மே தின பேரணியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தூத்துக்குடியில் இன்று மே தின பேரணி நடைபெற்‌றது.

பேரணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர் பேரணியில் கலந்துகொண்டு சிவப்பு சட்டை அணிந்து நடந்து சென்றார். தூத்துக்குடி அண்ணாநகர் 7வது தெரு சந்திப்பில் தொடங்கிய இந்த‌ பேரணி, சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நிறைவடைந்த‌து.

அங்கு தொழிலாளர் தின நினைவு தூணில் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கனிமொழி எம்.பி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோரும் நடந்து சென்றார்கள்.

இதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த தொழிலாளர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் உரிமைக்காக போராடிய நாள் தான் மே தினம். தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தால் தான் உரிமைகள் வந்து சேரும். இதற்கு உரிமை உள்ள இயக்கம் தி.மு.க. தான். பிரதமர் மோடி நாட்டின் காவலாளி என்கிறார். அவர் நாட்டின் களவாணியாக விளங்குகிறார். தி.மு.க. தான் நாட்டின் காவலாளியாகவும், ஒட்டு மொத்த காவலாளியாகவும் விளங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தை தொழிற்சங்கம் சார்பாக கொண்டாட வேண்டும் என கலெக்டர் அறிவித்தார். சென்னை சிந்தாரி பேட்டையில் மே தின நினைவு சின்னத்தை அமைத்தார். இந்த நினைவு சின்னம் எப்படி அமைய வேண்டும் என்று வரைப்படம் தயாரித்து நேரடியாக சென்று பலமுறை பார்த்து அதை சரி செய்தார்.

அதன் பிறகு அவரே நினைவு சின்னத்தை திறந்து வைத்தார். நினைவு சின்னம் அமைந்துள்ள நேப்பியர் பூங்காவை மே தின பூங்கா என அழைக்கவும் உத்தர விட்டார். தொழிலாளர் உரிமையை நிலை நாட்ட கருணாநிதி எடுத்து கொண்ட அக்கறையை உணர்ந்து பார்க்க வேண்டும்.

அண்ணா முதல்வராக இருந்த போது மே 1-ந்தேதியை அரசு விடுமுறையாக அறிவித்தார். அவர் வழியில் ஆட்சி நடத்திய கருணாநிதி மே 1-ந்தேதியை ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினமாக அறிவித்தார். அதன் பின்பு வி.பி.சிங் தலைமையில் அமைந்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க காரணமாக அமைந்தவர் கருணாநிதி. தற்போது உள்ள மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குகின்றன. தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன.

உரிமைக்காக போராடும் தொழிலாளர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தடியடி, சிறையில் அடைப்பு சம்பவமும் நடக்கின்றன. கோரிக்கைக்காக டெல்லி சென்று போராடிய விவசாயிகளை அழைத்து பேசாத மோடி சேடிஸ்ட் பிரதமராக விளங்குகிறார். தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பலன்களை அரசு வழங்கவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக நாட்டை அடகு வைக்கும் நிலை உள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு நாட்டிற்கு விடிவு காலம் பிறக்க இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இன்று மாலை 5 மணிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

தொடர்ந்து அன்னை இந்திராநகர், மாப்பிள்ளை யூரணி, தருவைகுளம், புதியம்புத்தூர் பகுதியில் பிரசாரம் செய்கிறார். இரவில் ஓட்டப்பிடாரத்தில் நிறைவு செய்கிறார். நாளை (வியாழக்கிழமை) தூத்துக்குடி ஸ்பிக்நகர் குடியிருப்போர் நலசங்கம் சந்திப்பில் பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, தங்கம்மாள்புரம், கட்டாலங் குளம், முடிவைத்தானேந்தல் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

பகிரவும்...