இன்று கேரளா வருகை- வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ராகுல்காந்தி
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி அளித்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று முதல் 3 நாட்கள் ராகுல்காந்தி கேரளாவில் ரோடு ஷோ நடத்துகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சத்து 31 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார்.
மேலும் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி அளித்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று (7-ந்தேதி) முதல் 3 நாட்கள் ராகுல்காந்தி கேரளாவில் ‘ரோடு ஷோ’ நடத்துகிறார்.
டெல்லியில் இருந்து புறப்படும் ராகுல் இன்று பகல் 2 மணிக்கு ஹரிப்பூர் விமான நிலையத்தை வந்தடைகிறார். தொடர்ந்து 3 மணிக்கு திருவல்லி பகுதியில் காங்கிரசார் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்கிறார்.
அதன்பிறகு காளிக்காவூர் செல்லும் ராகுல்காந்தி அங்கு ‘ரோடு ஷோ’ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு நிலம்பூரிலும், 5 மணிக்கு எறநாடிலும், 6 மணிக்கு ஹரிக்கோடிலும் நடைபெறும் ‘ரோடு ஷோக்’களில் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.
இரவு கல்பேட்டாவில் தங்கும் ராகுல்காந்தி நாளை (8-ந்தேதி) காலை 10.30 மணிக்கு 2-வது நாள் ‘ரோடு ஷோ’வில் பங்கேற்கிறார். முன்னதாக காலை 10.30 மணிக்கு கல்பேட்டாவில் தொண்டர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 11.45 மணிக்கு கம்பல்காடிலும், 12.30 மணிக்கு பனமரம் பகுதியிலும், 2 மணிக்கு மானந்தவாடியிலும், 3 மணிக்கு புல்பள்ளியிலும், 4.30 மணிக்கு சுல்தான்பதேரியிலும் ‘ரோடு ஷோ’ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
வயநாடு, மலப்புரம், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் மாலையில் அவர் ஆலோசனை நடத்துகிறார். இரவு கல்பேட்டாவில் தங்குகிறார். ஞாயிற்றுக்கிழமை கோழிக்கோடு, எங்கபுழா, முக்கம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து ராகுல்காந்தி நன்றி தெரிவிக்கிறார். பகல் 1 மணிக்கு கோழிக்கோடில் இருந்து ராகுல் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
ராகுல்காந்தி கேரளா வருகையையொட்டி மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
காங்கிரசுக்கு கேரள மக்கள் மிகப்பெரிய வெற்றியை அளித்ததற்கு நன்றி தெரிவிப்பதற்காக ராகுல்காந்தி கேரளாவில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். ‘ரோடு ஷோ’ நடத்தும் அவர் காங்கிரஸ் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். அடுத்து வர உள்ள உள்ளாட்சி தேர்தல், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஆகியவற்றுக்கு தொண்டர்களை தயார் படுத்த தொடங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.