இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் அரசியல் வாதிகள் ; தாய்நாட்டுக்கான தேசிய வீரர்கள் அமைப்பு
தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி அரசியல் இலாபம் அடைவதற்காக இனங்களுக்கிடையில் குரோதத்தை தூண்டும் வகையில் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். ஆகையால் இனங்க ளுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பயணத்தில் தம்முடன் ஒன்றிணையுமாறு முன்னாள் மேஜரும் தாய்நாட்டுக்கான தேசிய வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சட்டத்தரணி அஜித் பிரசன்ன அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முப்பது வருட யுத்தத்தின் பின்னர் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டு மக்கள் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ்,- சிங்கள அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்த களத்தில் நேரடியாக தொடர்புபட்டிருந்த இராணுவ வீரர் என்ற வகையில் யுத்தததின் வலியை நன்றாக உணர்ந்து கொண்டுள்ளேன். அந்த வகையில் துன்பம் என்பது அனைத்து தரப்பினருக்கும் பொதுவான விடயமாகும்.
தமிழர், சிங்களவர் என வேறுபடுத்தி நோக்குவதற்கான தேவையெதுவும் இல்லை. ஆயினும் சிங்கள,- தமிழ் மக்க ளின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளாக அரசியல் வாதிகள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். அவர்களே இனவாதத்தை தூண்டுபவர்களாக காணப்படுகின்றனர். மாறாக மக்கள் மத்தியில் எத்தகைய குரோத உணர்வும் இல்லை.
இனவாத போக்கானது நாட்டின் அபிவிருத்திக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் மற்றைய சமூகத்தினது கலாசாரம் மற்றும் பண்புகள் தொடர்பில் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும். அவ்வாறு ஒவ்வொரு இனங்களுக்கிடையிலான சமூக நல்லுறவு தொடர்பில் அறிந்து கொள்ளும் பட்சத்தில் குரோதங்களை தவிர்த்துக்கொள்ளக்கூடியதாகவிருக்கும். மக்கள் மத்தியில் நிலவும் இனவாத சிந்தனைகளை முற்றாக இல்லாதொழித்து அதன் ஊடாக அபிவிருத்தியடைந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது இரு சாராருக்கும் பாரிய இழப்பு ஏற்பட்டது. ஏராளமான இராணுவத்தினரும் யுத்தத்தில் உயிரிழந்தனர். பலர் அங்கவீனமடைந்தார்கள். அதன் காரணமாக ஏராளமான குடும்பங்கள் பாரிய அளவில் இழப்பை சந்தித்தனர். அந்த இழப்பானது வெறுமனே ஒரு சாராருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாறாக விடுதலைப் புலிகளின் பக்கத்திலும் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதன் ஊடாக அவர்களுடைய குடும்பங்களும் இழப்பை சந்திக்க நேரிட்டது.
இதன்காரணமாக பல குழந்தைகள் அநாதைகளாகப்பட்டுள்ளனர். பெற்றோர் பிள்ளைகளை இழந்துள்ளனர். இந்நிலையில், இழப்பு என்பது அனைவருக்கும் பொதுவான விடயமாகும். ஆகவே, இனமத பேதங்களை களைந்து இறுதி யுத்தத்தின் போது கைதுசெய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.
சிறைவாசம் அனுபவித்து வருபவர்களின் மீது வழக்குகள் தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருப்பினும். அவ ர்கள் அனைவரையும், அந்த வழக்குகளிலிருந்து நிபந்தனையின்றி விடுவிக்க வேண் டும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ சிறையில் உள்ள அனைத்து இராணுவத் தினரையும் விடுவிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் அவர்களை மாத்திரமல்லாது தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய பதவிகளை வகித்தவர்கள் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆயினும் அவர் களுக்கு கீழ் பணியாற்றியவர்கள் சிறைக ளில் உள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களும் விடுவிக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.