இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 9 பேர் பலி, 10,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா மாகாணத்தில் உள்ள ஃப்ளோர்ஸ் தீவுகளில் உள்ள லெவோடோபி லாகி-லாகி எரிமலை ஞாயிறன்று வெடித்தது. அதிலிருந்து கிளம்பிய நெருப்புக் குழம்பு வழிந்தோடியதோடு, கரும்புகையும் அப்பகுதியை சூழ்ந்துள்ளது. எரிமலை வெடிப்பால் அருகிலுள்ள கிராமங்களில் பல கிலோமீட்டருக்கு சாம்பல் நிரம்பியுள்ளது. 4 கிமீட்டர் தூரம் வரை பாறைகள் வெடித்துச் சிதறியதால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த எரிமலை வெடிப்பு குறித்து இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹாதி விஜாயா இன்று (திங்கள்கிழமை) கூறியதாவது: எரிமலை வெடிப்புக்குப் பின்னர் மின்சாரம் முற்றிலுமாக தடைபட்டது. பின்னர் சக்திவாய்ந்த மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த எரிமலை வெடிப்பை தீவிரமானதாக நாங்கள் வரையறுத்துள்ளோம். அதனால் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரை மக்கள் அனைவரையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை தொடங்கி எரிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
‘சுனாமி, எரிமலை அச்சுறுத்தல் நிறைந்த இந்தோனேசியா’ – இந்தோனேசியா (pacific ring of fire) என்று அழைக்கப்படும் ‘பசிபிக் நெருப்பு வளையத்தில்’ அமைந்துள்ளது, இங்குள்ள டெக்டோனிக் தகடுகள் அடிக்கடி ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதால் அதிகளவில் நிலநடுக்கங்கள், நில அதிர்வுகள் ஏற்படும் பகுதியாக இருக்கிறது. ஜாவா, சுமத்திரா தீவுகளில் சுனாமி பாதிப்புகளும் அதிகமாக ஏற்படுவதுண்டு. அதேபோல் இந்தோனேசியாவில் பல்லாயிரம் கோடி ஆண்டுகள் பழமையான தீவிரமான, அமைதியான எரிமலைகள் இருக்கின்றன.
கடந்த மே மாதம் தொட்டே இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்புச் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகிறது. மே மாதம் ஹல்மஹேரா தீவில் உள்ள மவுண்ட் இபு எரிமலை வெடித்தது. அப்போது 7 கிராமங்களின் மக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து வடக்கு சுலவேசியின் ருவாங் எரிமலையும் மே மாதத்தில் வெடித்து. அப்போது, 12,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். மே 11 ஆம் தேதி மேற்கு சுமத்ரா மாகாணத்தில் மராப்பி எரிமலை வெடித்ததில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இப்போது இன்னொரு எரிமலை வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.