இங்கிலாந்தில் ரஷ்யாவின் தலையீடு: பாதுகாப்புச் சட்டங்களை வலுப்படுத்த நடவடிக்கை!
இங்கிலாந்தில் ரஷ்ய தலையீட்டின் அச்சுறுத்தலை அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் நட்பு நிலையற்ற பிற நாடுகளுடனான தொடர்பாடலை இங்கிலாந்து கையாண்டவிதம் குறித்து தொழிற்கட்சி விமர்சித்திருந்தது. இந்நிலையில், நாட்டில் பாதுகாப்புச் சட்டங்களை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக, வெளிநாட்டு முகவர்கள் இங்கிலாந்தில் பதிவுசெய்ய வேண்டிய விடயம் குறித்து புதிய சட்டம் கொண்டுவர ஆலோசிக்கப்படுவதாக போக்குவரத்துச் செயலாளர் கிரான்ற் ஷப்ஸ் (Grant Shapps ) இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரு நாடாக நாம் செய்ய வேண்டியது இன்னும் அதிகம் என்றும் அதனால், மேலும் அதிகாரங்களைப் பயன்படுத்துவதும் கடினமான சட்டங்களை கொண்டுவருவதும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளிநாட்டு முகவர்களின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்காவும் அவுஸ்ரேலியாவும் என்ன செய்கின்றன என்பதையும் கவனத்திற்கொள்ளலாம் என்றும் ஷப்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் நேட்டோவுக்குப் பிறகு இங்கிலாந்தே ரஷ்யாவின் முக்கிய இலக்கு என நாடாளுமன்றத்தின் புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழு (Intelligence and Security Committee) கூறியதையடுத்து, ரஷ்ய உளவு மற்றும் மீறலை எதிர்ப்பதற்கு பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்ய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், புதிய சட்டம் பற்றிய அரசாங்க அறிவிப்பு தமது குழுவின் முக்கிய பரிந்துரை என புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர் கெவன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தகைய சட்டம் வெளிநாட்டு சக்திகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் இங்கிலாந்துக்கு வரும்போது பதிவுசெய்ய கட்டாயப்படுத்தும். அவ்வாறு செய்யாதவர்கள் மற்றும் மறைமுகமாக செயற்படுபவர்கள் சட்டத்தை மீறியவர்களாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.