Main Menu

ஆயிரம் ரூபாவைவிட மக்களின் உயிர்தான் எமக்கு முக்கியம்

ஆயிரம் ரூபாவைவிட மக்களின் உயிர்தான் எமக்கு முக்கியம். எனவே, சம்பள உயர்வு விடயத்தில் எந்தவொரு நொண்டி சாட்டையும் நாம் கூறவில்லை. மக்களுக்கு நிச்சயம் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்போம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (18) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,  

” கொரோனா வைரஸின் பிடிக்குள் சிக்கியுள்ள நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர், சுகாதார பிரிவினர், பாதுகாப்பு தரப்பினர் என ஒட்டுமொத்த அரச கட்டமைப்பும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதிலும் குறை கண்டுபிடித்து, பிரசாரம் செய்து – தற்புகழ் தேடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.  

இந்த அரசாங்கத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒரே விதத்தில் தான் கவனிக்கப்படுகின்றனர். அந்தவகையில் 5000 ரூபா கொடுப்பனவு எமது மலையகத்துக்கும் நிச்சயம் கிடைக்கும்.  

கடந்த ஆட்சியின் போது தமக்கு சார்பானவர்களையே சமுர்த்தி பட்டியலில் இணைத்துள்ளனர். இதனால் உண்மையாலுமே அக்கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். எனவே, அந்த பட்டியலில் உள்ள குளறுபடியை நிவர்த்திசெய்து, நீதியான முறையில் வழங்குவதற்காகவே சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.  

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள, உள்ளாட்சி சபைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நிச்சயம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.  

தரிசு நிலங்களில் விவசாயம் செய்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கம்பனிகளும் இதற்கு இணக்கம் வெளியிடும். விவசாய அமைச்சு மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக உதவிகள் வழங்கப்படும்.  

அதேவேளை, கொரோனாவால் ஏற்பட்டுள்ள அதாசாரண சூழ்நிலை காரணமாகவே சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை  இறுதி படுத்த முடியாமல் போனது. எல்லா விடயங்களை விடவும் மக்களின் உயிருக்கே தற்போது முக்கியத்துவம் கொடுக்கின்றோம். நாடு படிப்படியாக மீண்டு வருகின்றது.  

சம்பள விடயத்தில் நாம் நொண்டி சாக்கு சொல்லவில்லை. நிச்சயம் எமது மக்களுக்கு அதனை பெற்றுக்கொடுப்போம்.  

தற்போதைய சூழ்நிலையில் சந்தா அறவிடவேண்டாம் என முதலாளிமார் சம்மேளனத்துக்கும், ஒவ்வொரு தோட்டக் கம்பனிகளுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடிதம் மூலம் அறிவித்தல் விடுத்திருந்தது. எனவே, நாம் அறவிடவில்லை.  

முதலில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டு வருவோம். அதன்பின்னர் தேர்தலை பற்றி சிந்திக்கலாம்.” – என்றார்.  

பகிரவும்...