Main Menu

அழிக்கப்பட்ட அறிவுக் கோயில் – யாழ். பொது நூலக எரிப்பு நாள் இன்று

ஒரு சமூகத்தினுடைய காத்திரமான மாற்றத்துக்கு ஒரே ஒரு நல்ல நூல் உதவி செய்ய முடியும்.

ஈழத்தமிழர்களின் கடந்த கால வரலாற்றை எடுத்துப்பார்த்தால் சமூக மேம்பாட்டில் எந்தளவுக்கு உரிமைக்கான முன்னெடுப்புகள் பங்காற்றியதோ அதே அளவுக்கு கல்விசார் சமூகத்தின் முன்னெடுப்புகள், தீர்மானங்கள் பங்களித்துள்ளன.

ஈழத்தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட அத்துமீறல்கள் பல்வேறு முகங்களைக் கொண்டவை. கல்விசார் கட்டமைப்புகளை குலைத்தல், உரிமைக்காக எழுப்பப்படும் குரல்வளைகளை நசுக்குதல் மற்றும் குறித்த நபர்கள் மீது வன்முறையினை பிரயோகித்தல், சமய – கலாசார கட்டமைப்புகளை இல்லாது செய்தல் என நீண்டு செல்லும் குறித்த பட்டியலில் ஏறக்குறைய அத்தனை வழிகளுமே பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான அத்துமீறல்களில், இன்னும் உலக தமிழர்களின் மனங்களில் புகைந்துகொண்டிருக்கும் மாறாத வடு யாழ். பொது நூலக எரிப்பு.

ஈழத்தமிழர்களின் அறிவுப்பொக்கிஷமாக இன்றும் நிமிர்ந்து நிற்கும் யாழ். பொது நூலகத்தின் எரிப்பு தொடர்பாக கவனம் செலுத்துவதற்கு முன்பு, குறித்த நூலகம் எத்தனை பேரின் முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்டது, எத்தனை இடர்பாடுகள், நெருக்கடிகளுக்கு மத்தியில் வளர்க்கப்பட்டது என்பது குறித்து கவனம் செலுத்துவது அவசியம் ஆகிறது.

யாழ். நூலகம் ஒரு அரசாங்கத்தின் அல்லது பொருளாதார நிலைத்தன்மை பெற்ற ஏதேனும் ஓர் குழுவின் பொருளாதார – திட்ட உதவியால் எடுத்த எடுப்பில் தோற்றம் பெற்றது அல்ல. மாறாக இந்நூலகத்தின் வளர்ச்சிப்பாதை படிப்படியாக தோற்றம் பெற்றது.

யாழ். நூலக எரிப்புக்கு பின்னர் உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரியாக விளங்கும் அடோல்ப் ஹிட்லரின் சர்வாதிகார தன்மை இலங்கை தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அநீதிகளோடு ஒப்பிட்டு பேசப்பட்டது.

ஆனால் அதற்கு முன்னரே ஹிட்லரை யாழ். நூலகத்தின் உருவாக்கத்துடன் சம்பந்தப்படுத்தினால், ஜெர்மனிய ஜனாதிபதி போல் வோன் ஹிண்டன்பெர்க்கினால் நாசி தலைவர் ஹிட்லர் ஜெர்மனியின் ச்சான்சிலராக 1933ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார்.

அதே ஆண்டு யாழ்ப்பாணத்தில், சமூகத்தின் கல்விசார் வளர்ச்சியின் மேல் பற்றுறுதி கொண்ட மு.ஆ.செல்லப்பா எனும் ஒருவரால்இ யாழ்ப்பாணத்தில் நூலகம் ஒன்றினை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த யோசனைக்கு இணக்கம் தெரிவித்த, நூலக உருவாக்கத்தில் ஆர்வம் காட்டிய தனது நட்பு வட்டத்தில் உள்ளவர்களைக்கொண்டு, 1934ம் ஆண்டு ஜுன் மாதம் 9ம் திகதி ஓர் சிறிய வாசகர்சாலை உருவாக்கப்பட்டது.

தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ். நூலகம் இவ்வாறு தனது பயணத்துக்கான முதல் அடியிணை எடுத்து வைத்த நிலையில், அக்காலப்பகுதியில் யாழ். மேல் நீதிமன்ற நீதவானாக இருந்த திரு ஐசாக் என்பவரை தலைவராகவுஇ கே.எம்.செல்லப்பா செயலாளராகவும் கொண்டு குறித்த நூலகத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், குறித்த குழுவினர் சமூகத்தை மையமாகக் கொண்டு நூலக உருவாக்கம் தொடர்பாக மேற்கொண்ட ஆத்மார்த்தமான முயற்சி காரணமாக ஆரம்ப புள்ளி வைக்கப்பட்டு இரண்டே மாதங்களுக்குள் யாழ். பொது நூலகத்துக்கு ஓர் அறை கிடைக்கிறது.

உலகின் போக்கையே மாற்றிய – காலங்கள் கடந்தும் இன்றும் மக்களால் கொண்டாடப்படுகின்ற நூல்கள் ஒற்றை எழுத்தில் இருந்துதான் ஆரம்பிக்கப்படுகின்றன.

வரலாற்று சிறப்புமிக்க உலகின் அனைத்துக்குமே ஓர் ஆரம்ப வரலாறும் கூடவே படிமுறை வளர்ச்சி சார்ந்த நெருக்கடிகளும் இருக்கும் என்றால் யாழ். பொது நூலகம் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல.

இவ்வாறு யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்ட இக்குழு அங்கு வெறும் 844 புத்தகங்களுடன் அடுத்தகட்ட பயணத்தை ஆரம்பிக்கின்றனர். கூடவே சில செய்தி பத்திரிகைகள், சஞ்சிகைகள்.

நூலகத்தின் வளர்ச்சி அதிகரிக்க வேண்டுமானால், குறித்த நூலகம் தமிழ் சமூகத்தின் மத்தியில் நிலையான ஓர் இடத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால், ஒட்டுமொத்த சமூகத்திலிருந்தும் பங்களிப்புகள் வரவேண்டும் என்பதை நூலகத்துக்காக உழைத்துக்கொண்டிருந்தவர்கள் மிக விரைவாகவே உணர்ந்திருந்தனர்.

அதனடிப்படையில் நூலகத்தின் ஆரம்ப காலத்தில் வெளிவந்துகொண்டிருந்த ‘இந்து சாதனம்’ எனும் பத்திரிகையில் நூலகத்துக்கான அறிமுகம் மற்றும் நூலக வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் தொடர்பாக விளம்பரம் செய்கின்றனர்.

தமிழ் சமூகம் புத்திஜீவிகள் கூடாரம் என்பதை உலகறியும். உலகின் நாலா திசைகளிலும் இருந்த தமிழ் சமூகத்தின் புத்திஜீவிகள் தமிழர் பெருமையினை உலகெங்கும் பறைசாற்றும் ஓர் அறிவுக்கீற்ற்றினை கண்டடைந்த மகிழ்ச்சியிலோ ஏதோ, தங்களால் இயன்ற உதவிகளை நூல்களாகவும் நிதியாகவும் ஆலோசனைகளாகவும் வழங்குகின்றனர்.

இதன் பின்னர் யாழ் நூலகம் எடுத்து வைத்த அத்தனை அடிகளும் சற்றே பலமானவை. அதனடிப்படையில், 1935ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் பிரதான வீதியில் அமைந்துள்ள ஓர் கட்டடத்துக்கு யாழ். நூலகம் இடம்பெயர்ந்தது. அதன்பின்னர் அடுத்த ஆண்டே அதாவது, 1936ம் ஆண்டு யாழ். நகரசபை கட்டடம் தீர்மானிக்கப்பட்டு சற்றே விஸ்திரமாக இயங்க ஆரம்பிக்கிறது.

ஆம்! ஏறக்குறைய திண்ணையில் ஆரம்பிக்கப்பட்ட நூலகம் வாடகை அறை, வாடகை கட்டடம் என உருமாறி நிலையான – ஓர் கட்டமைக்கப்பட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டமையே யாழ். நூலகத்துக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.

இந்த அங்கீகாரம் வெறுமனே கட்டடங்கள் சார்ந்த, புத்தகங்களின் எண்ணிக்கை சார்ந்த வளர்ச்சிக்கு கிடைத்தவையல்ல. மாறாக தமிழ் சமூகத்தின் அறிவுத்தேடலுக்கு தீனி போடக் கிடைத்த பொக்கிஷமாக அக்காலப்பகுதியிலேயே கொண்டாடப்பட்டது.

1930ம் ஆண்டு பணம் சதங்களில் செலவிடப்பட்ட காலப்பகுதியென்பதை புதிதாக யாரும் சொல்ல தேவையில்லை. அக்காலப்பகுதியிலேயே மக்கள் 3 ரூபாய் சந்தா செலுத்தி தம்மை மேம்படுத்திக்கொண்டனர் என்பது பெருமைமிகு வரலாறு.

இவ்வாறு வாசகர்களின், புத்தி ஜீவிகளின் பேராதரவுடன் யாழ். பொது நூலகம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்த காலப்பகுதியில் இலங்கை நிர்வாக கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

1949ம் ஆண்டு யாழ்ப்பாண நகரசபை இலங்கையின் இரண்டாவது மாநகரசபையாக தரமுயர்த்தப்பட, அதன் புதிய மேயராக சாம் சபாபதி என்பவர் பொறுப்பேற்றுக்கொள்கிறார்.

அவர் தனது பங்கிற்கு யாழ். பொது நூலகத்திற்கு ஓர் பிரத்தியேக கட்டடம் தேவை என சபையில் முன்மொழிந்து, குறித்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் மூலம் உருவானதுதான் யாழ். பொது நூலகம்.

தமிழ் அறிவுசார் சமூகத்தின் கோவிலாக பார்க்கப்படும், யாழ். பொது நூலகத்திற்கான புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் 1953இல் ஆரம்பிக்கப்பட்டது.
வரலாற்று சிறப்புமிக்க ஓர் நூலகம் கட்டப்படுவது என்று ஏற்கனவே முடிவானதற்கு அமைய கட்டடத்தின் அமைப்புகள் திட்டமிடுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

அதனடிப்படையில்இ 1953ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதி அடிக்கல் நாட்டப்பட்ட யாழ் பொது நூலகத்தின் கட்டட வடிவமைப்புக்காக துறைசார் வல்லுநர்கள் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டனர். அவர்களில் M.S.நரசிம்மன் மற்றும் பேராசிரியர் ரங்கநாதன் ஆகியோர் உள்ளடக்கம்.

அதே ஆண்டு யாழ். பொது நூலக கட்டட நிர்மாணப்பணிகளுக்காக அமைக்கப்பட்ட குழுவிற்கு வணக்கத்துக்குரிய லோங்க் அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த அதேவேளை, அவரது உருவ சிலை பின்னாட்களில் யாழ். பொது நூலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது என்பதும் குறித்த சிலை யாழ். நூலகத்தில் இடம்பெற்ற அத்துமீறலின்போது சேதமாக்கப்பட்டது என்பதும் வரலாற்றின் பெருந்துயரம்.

யாழ். பொது நூலகம் அமைப்பதற்கான நிதி சேகரிப்புகள் பல்வேறு வகைகளில் முன்னெடுக்கப்பட்டன. குறித்த முன்னெடுப்புக்கான நிதி சேகரிப்புகளுக்காக கேளிக்கை களியாட்ட நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் பலராலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு பலரது முயற்சிகளுக்கு மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட அறிவுக்கோபுரத்தின் முதல்க்கட்ட பணிகள் 1959ம் ஆண்டும் அதன் பின்னரான ஏனைய மேம்பாட்டு வேலைகள் 1970களின் முதல் பகுதிகளிலும் என வளர்ந்து வந்து தன்னை ஓர் தவிர்க்க முடியாத சின்னமாக உருமாற்றிக்கொண்டது யாழ். பொது நூலகம்.

எத்தனையோ துயரங்களுக்கு மத்தியில் வார்த்தெடுக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் தனிப்பெரும் சொத்தான யாழ். பொது நூலகம் ஏறக்குறைய 97,000 புத்தகங்களை தனக்குள் கொண்டு மிளிர்ந்தது.

இந்த எண்ணிக்கையில் தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளிலான நூல்களுடன், இன்னும் பல உலகில் வேறு எங்கேயும் பெற்றுக்கொள்ள முடியாத முதல் பிரதி ஓலைச்சுவடிகளும் காணப்பட்டன.

அதுமட்டுமல்லாமல் தமிழ் மொழியின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் பாலி மொழியில் உருவாக்கப்பட்ட பல பிரதிகளும் யாழ். பொது நூலகத்தில் இருந்தன.

இத்தனை புத்தகங்கள் யாழ். நூலகத்தில் பொக்கிஷப்படுத்தப்படுவதற்கான காரணம் இருந்தது. யுத்தத்தின் கோர மேகங்கள் தமிழர் தாயகப்பகுதிகளை படிப்படியாக சூழ ஆரம்பித்திருந்தாலும் எந்த காலப் பகுதியிலும் ஓர் அறிவுக்கூடத்தை அழிப்பதற்கு யாரும் துணிய மாட்டார்கள் என தமிழர்கள் நம்பினார்கள்.

அதன் காரணமாக தம்மிடம் இருந்த கண்டெடுக்க முடியாத அரிய படைப்புகளை நூலகத்தில் பத்திரப்படுத்தினார்கள். இந்த நம்பிக்கைகளுக்கு மத்தியில்தான், அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது.

1981ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதி. ஆனாலும் இலங்கை அரசாங்கத்தின் இந்த தீர்மானமானது காலங்கடந்தது என்பதும் குறித்த தீர்மானம் 1960களிலேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் இன்றும் அரசியல் அவதானிகளால் முன்வைக்கப்படும் கருத்தாக காணப்படுகிறது.

இக்காலப்பகுதியில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் விடுதலை எண்ணம் வேர்விட ஆரம்பித்திருந்த அதேவேளை, தமிழ் மக்களின் அல்லது தமிழ் அரசியலின் போக்கு பெரும்பான்மை ஆட்சியாளர்களை சற்றே ஆத்திரமூட்டியிருந்தது.

இந்நிலையில், 1981 மார்ச் 19 இல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 1981 ஜூன் நான்காம் திகதி மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தமையினைத் தொடர்ந்து பெரும்பான்மை ஆட்சியாளர்கள் பலர் யாழில் முகாமிட்டு தமது அரசியல் நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்திக்கொண்டிருந்தனர்.

இதேவேளை தமிழர் தரப்பும் தமக்கான தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில், 1981ம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி யாழின் நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணித் தேர்தல் கூட்டத்தின்போது நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தின்போது ஒரு சிங்களப் பொலிஸ் கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஏற்கனவே தமிழ் அரசியல் போக்கின் மீது அதிருப்தியடைந்திருந்த பெரும்பான்மை ஆட்சியாளர்களும் காவல்துறை உள்ளிட்ட படையினரும் யாழின் பிரதான வியாபார நிலையங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் என பல இடங்களை சேதமாக்கினர்.

இந்த அத்துமீறல்கள் படிப்படியாக யாழின் நகரப்பகுதிக்குள் நுழைந்தமையினைத் தொடர்ந்து, கலவரத்தினை கட்டுப்படுத்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

அடுத்த நாள் ஜூன் 01. 1981 யாழ். நகரம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்க, அன்று இரவு தமிழர்களின் அறிவுக் கோயிலாக திகழ்ந்து வந்த யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்குள் நுழைந்த ஒரு குழு அத்தனை காலமும் கட்டித் தேக்கி வைத்திருந்த கோபத்தை, அங்கு காட்டினார்.

ஏறக்குறைய 97000 புத்தகங்களை தமது தீக்குச்சிகளும் பந்தங்களும் தீக்கிரையாக்கும் என்பதை அவர்கள் அறிந்திராதிருக்க எந்த முகாந்திரமும் இல்லை.

ஒரு இனத்தினை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் கல்வி, கலாசார, சமூக இருப்புகளையும் அழிக்க வேண்டும் என்பது உலகின் வன்முறை மொழி. அதற்கேற்றற்போலவே இந்த அணைத்துவிட முடியாத நெருப்பு ஏற்றப்பட்டது.

எவ்வாறாயினும் இந்த அழிவுகள் அரங்கேற்றப்பட்ட மே மாத இறுதி நாட்களில் யாழில் இருந்து வெளிவந்த ஈழ நாடு பத்திரிகையும் அழிக்கப்பட்டிருந்த நிலையில், திகதியை கூட சரியான முறையில் ஆவணப்படுத்த முடியாத காரணத்தினாலோ என்னமோ யாழ். பொது நூலக எரிப்பு தொடர்பாக இன்னுமொரு தரப்பினர் மே மாதம் 31ஆம் திகதி பின்னிரவில் நடைபெற்றதாக தெரிவிக்கின்றமையும் இவ்வேளையில் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில், எரிக்கப்பட்ட நூல்களும் கருக்கப்பட்ட யாழ். பொது நூலக கட்டடமும் புகைந்துகொண்டிருக்க, அந்நேரம் யாழின் மாவட்ட செயலாளராக இருந்த யோகேந்திரா துரைசாமியினூடாக குறித்த செய்தி உலகெங்கும் பரவுகிறது.

யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டமையினை கொழும்புத்துறையில் உள்ள குருமடத்தில் இருந்து கேள்வியுற்ற வணக்கத்துக்குரிய டேவிட் அடிகளார், அந்த இடத்திலேயே மாரடைப்பு வந்து இறந்து போனார்.

இன்னும் சிலர் யாழ். நூலகம் எரிந்துகொண்டிருப்பதை கண்ணுற்ற அந்த நொடியிலிருந்தே மன நலம் பாதிக்கப்பட்டனர். சிறுபான்மையினருக்கு எதிரான அத்துமீறல்கள் உலகின் அனைத்து மூலைகளிலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

இனமென்றும் மதமென்றும் பேதங்கள் விதைக்கப்பட்டு அழிக்கப்படும் சிறுபான்மையினர்களது தரப்பிற்கு நியாயம் கேட்கவும் பல தரப்பினர் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஈழத்தமிழர்களின் கல்வி மற்றும் கலாசார இருப்பாகவும் அடையாளமாகவும் இருக்கும் யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்ட காலப்பகுதியிலும் இப்பொழுதும் அதற்கான நியாயம் மெளனிக்கப்பட்டிருக்கின்றமையானது வரலாற்றின் மிகப்பெரும் துயரம்.

எவ்வாறாயினும் அத்தனை அழிவுகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் பின்னர் நிமிர்ந்து நிற்கும் தமிழினத்தை போலவே, யாழ். நூலகமும் நிமிர்ந்தது.

மீண்டும் உதவிகள் கோரப்பட்டன. புலத்திலும் புலம் கடந்த தேசங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்கள் தமது உழைப்பின் ஒரு பகுதியினை மனமுவந்து வழங்கினர்.

மீண்டும் யாழ். பொது நூலகம் புனரமைக்கப்பட்டது. மீண்டும் தமிழர் தாயகத்தின் மாணவர்களும் புத்தி ஜீவிகளும் அங்கிருந்து அறிவுப்பாணம் பருக ஆரம்பித்தனர். அதனடிப்படையில், இன்றும் உலக தமிழர்களின் அறிவுக் கோயிலாக நிமிர்ந்து நிற்கிறது யாழ். பொது நூலகம்.

ஆனாலும் யாழ். நூலகத்துடன் சேர்த்து எரிக்கப்பட்ட நீதிக்கான பதிலை யாரிடம் கேட்பது என்பதற்கான பதிலை இன்றுவரை தமிழர்களால் கண்டடைய முடியவில்லை.

பகிரவும்...