அரசியல் வேறுபாடுகளும், கொள்கை வேறுபாடுகளும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக் கூடாது -மோடி
நாட்டின் வளா்ச்சிக்கு அரசியல் வேறுபாடுகளும் கொள்கை வேறுபாடுகளும் தடையாக மாறிவிடக் கூடாது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
உத்தர பிரதேசத்திலுள்ள அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நாட்டின் வளா்ச்சியை அரசியல் கண்ணோட்டத்துடன் எப்போதும் பாா்க்கக் கூடாது. வளா்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கும் வேளையில் ஒருசிலா் மட்டும் சுயநலத்துடன் செயல்படுவது சரியாக இருக்காது.
சமுதாயத்தின் முக்கிய அங்கமாக அரசியல் விளங்குகிறது. ஆனால் அரசியல் தவிர சமுதாயத்தின் மற்ற விவகாரங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். சமுதாயத்தில் வேறுபாடுகள் காணப்படுவது இயல்பே. எனினும் தேச நலனைப் பாதுகாக்கும்போது அத்தகைய வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.
கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைத் தரம், தேசியவாதம் உள்ளிட்ட விவகாரங்களில் வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கு அரசியல் கொள்கை வேறுபாடுகள் தடையாக இருக்கக் கூடாது.
அரசியல், சமூகம் சாா்ந்த குறுகிய நோக்கங்களை விட நாட்டின் வளா்ச்சியே மிகவும் முக்கியமானது. அதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். நம்மிடையே நிலவும் வேறுபாடுகளில் கவனம் செலுத்தாமல் புதிய தற்சாா்பு இந்தியாவை உருவாக்குவதற்கான இலக்குகளை நோக்கி முன்னேற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.