அயோத்தி ராமர் கோவிலுக்கு ஏப்ரல் மாதம் அடிக்கல்
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு நேற்று பரபரப்பான தீர்ப்பை ஒருமித்த கருத்துடன் அளித்தது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. கோவில் கட்டுவதற்காக 3 மாதத்திற்குள் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
மசூதி கட்டுவதற்காக அயோத்தியின் முக்கியமான பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் , அலகாபாத் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் மூலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உறுதியாகி உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், விசுவ இந்து பரிஷத்தும் தீவிரம் காட்டியுள்ளன.
ராம நவமி தினம் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. அப்போது அடிக்கல் நாட்ட இந்த இரு அமைப்புகளும் திட்டமிட்டுள்ளன.
ஏற்கனவே விசுவ இந்து பரிஷத் அமைப்பின் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட ராமஜென்மபூமி நிவாஸ் என்ற அறக்கட்டளை சார்பில் ராமர் கோவில் கட்டுவதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அயோத்தியில் உள்ள கர் சேவகபுரம் என்ற இடத்தில் பணிமனை அமைத்துள்ளனர். இங்கு மரத்தால் ஆன மாதிரி ராமர் கோவில் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதன்படி தரை மட்டத்தில் இருந்து 128 அடி உயரம் கொண்ட இக்கோவில் 266 அடி நீளமும், 140 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். இக்கோவில் 212 தூண்களை கொண்டது.
இந்த பணிமனையில் ராமர் கோவில் கட்டுவதற்காக தூண்கள் செதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இது தவிர “ஸ்ரீராம்” மந்திரங்கள் இடம்பெற்றுள்ள சுவர் உருவாக்கப்பட்டுள்ளது.
இது பற்றி பணிமனையின் பொறுப்பாளர் அன்னு பாய்சோம்புரா கூறும்போது, “ராமர்கோவிலுக்கான தூண்கள் செதுக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கினால் கோவில் அடித்தளம் அமைப்பதற்கான பணியை தொடங்க தயாராக உள்ளோம்” என்றார்.
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவரும், வக்கீலுமான ஆலோக்குமார் கூறியதாவது:-
அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க காலம் காலமாக போராடிய விசுவ இந்து பரிஷத் அமைப்புக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. கவுரவத்தையும் வழங்கியுள்ளது. இதன்மூலம் இந்துக்களின் 491 ஆண்டுக் கால நீண்ட நெடிய போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
அயோத்தியில் பிரமாண்ட அளவில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். ராமர் கோவில் கட்டுவதற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை அதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 2022-ம் ஆண்டு சட்ட சபை தேர்தல் நடக்கிறது. அதற்குள் அங்கு ராமர் கோவிலை கட்டிவிட வேண்டும் என்பதில் விசுவ இந்து பரிஷத்தும், ஆர்.எஸ்.எஸ்.சும் தீவிரம் காட்டி உள்ளன.