அமைதியான நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நேர்மையாக நிறைவேற்றுவோம் – ஜனாதிபதி
பயங்கரவாதத்துக்கு அஞ்சி தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து அமைதியான நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு துறையினர் சிறப்பான சேவையை ஆற்றி வருவதாகவும் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து அமைதியான நாட்டை கட்யெழுப்பியதன் கௌரவம் முப்படையினர், பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் உரித்தாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற துன்பியல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இன்று (11) முற்பகல் அம்பாறை, உஹன மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத் தொடரின் அம்பாறை மாவட்ட நிகழச்சித்திட்டத்தின் இறுதி முன்னேற்ற மீளாய்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இவ்வாறான தாக்குதல்களுக்கு முகங்கொடுத்த அனைத்து நாடுகளின் தலைவர்களும் மிக குறுகிய காலத்திற்குள் தமது நாட்டினுள் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அத்தகைய செயற்பாடுகளுக்கு அந்நாட்டு அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையுடன் கைகோர்த்து செயற்பட்டதே காரணமாக அமைந்தது என்று தெரிவித்தார்.
அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் பாதுகாப்பு துறையினர் மீது பூரண நம்பிக்கை வைத்து கடந்த 20 நாட்களாக அவர்களை உரிய முறையில் நிர்வகித்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அந்த பொறுப்பை பாதுகாப்பு துறையினர் சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளதாகவும் தன்னைப்போன்றே இந்நாட்டு பிரஜைகள் அனைவரும் எமது பாதுகாப்பு துறையினர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
எனினும் ஒரு சில வஞ்சக அரசியல்வாதிகள் நாட்டில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவதனை எதிர்பார்ப்பதும் இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தில் கூட கீழ்த்தரமான அரசியல்கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு சிலர் மேற்கொண்ட முயற்சிகளை கண்டு தான் மிகுந்த கவலையடைவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த பயங்கரவாத சம்பவத்தினால் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் மக்களின் அன்றாட செயற்பாடுகளையும் நிறைவேற்றுவதில் தான் பின்வாங்கினால் அது பயங்வாதிகளின் வெற்றியாக அமைந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
அதனால் தேசிய பாதுகாப்பின் மீது பரிபூரண நம்பிக்கை வைத்து நாட்டுக்காக தத்தமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தாமதமின்றி முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் 16 இலட்சம் அரச ஊழியர்களுக்கும் முன்பை விட தற்போது பாரிய பொறுப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினைகளை வினைத்திறனான முறையில் அறிந்து அவற்றுக்கு குறுகிய கால, நீண்ட கால தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவின் பேரில் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்“ செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய செயற்திட்டங்கள் உள்ளிட்ட அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்திட்டங்களின் ஊடாக விரைவாகவும் முறையாகவும் மக்களுக்கு அதிக நன்மைகளை பெற்றுக்கொடுப்பதே இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், மேலும் குறிப்பிடுகையில் அபிவிருத்தி செயற்பாடுகளில் பின்னடைவு காணப்படும் மாவட்டங்களை தேர்ந்தெடுத்து நாடளாவிய ரீதியில் இந்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் இதன் அடுத்த கட்ட நிகழ்ச்சித்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தை மையமாகக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், உஹன மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் மாதத்திற்குள் முன்னெடுக்கவுள்ளதாகவும் அதன் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக எதிர்வரும் வாரம் 50 இலட்ச ரூபா நிதியினை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
“இலங்கை சமூக, பொருளாதார மற்றும் கலாசார மறுமலர்ச்சிக்கான மக்கள் சேவையுடன் ஒன்றிணவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டத் தொடரின் மூன்றாவது கட்டம் அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி கடந்த 06ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
உஹன, அக்கரைப்பற்று, அம்பாறை, கல்முனை, பொத்துவில், சாய்ந்தமருது, திருக்கோவில், தமண உள்ளிட்ட 20 பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் மக்கள் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் இதன்போது நடைமுறைப்படுத்தப்படுவதுடன், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள், இளைஞர்கள், ஓய்வுபெற்றவர்கள், அரசாங்க அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மட்டத்தில் மக்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி மிகுந்த ஈடுபாட்டுடன் இந்த நிகழ்ச்சித்திட்டங்களுடன் பங்குபற்றி வருகின்றனர்.
இரண்டாயிரத்து நூற்றுக்கும் அதிகமான இந்த அபிவிருத்தி, சேவை திட்டங்களுக்கு 92 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பயனாளி குடும்பங்கள் நான்கு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமாகும். மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மேலும் 130 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் இதன்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இன்று இடம்பெற்ற நிறைவு விழாவின்போது மாவட்ட மக்களுக்காக பல நன்மைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன், வணக்கஸ்தலங்களின் அபிவிருத்திற்கான உதவிகள், மருத்துவமனைக்கு தேவையான அம்பியூலன்ஸ் வண்டிகளை வழங்குதல் மற்றும் உபகரணங்களை வழங்குதல், குடிநீர் கட்டமைப்புகள் மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பங்களுக்கு வீட்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்குதல், காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்தல், ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகளுக்கான பொறுப்புகளை கையளித்தல், சிறுவர் இல்லங்களுக்கான நிதி வழங்குதல், சுயதொழில் மற்றும் வாழ்வாதார செயற்பாடுகளின் அபிவிருத்திற்கான கடன் வழங்குதல், நன்னீர் மீன்பிடிக்கான வலைகளை வழங்குதல், சிறு கைத்தொழில் மற்றும் விவசாய உபகரணங்களை வழங்குதல், தென்னங்கன்று மற்றும் மர முந்திரிகை கன்றுகளை வழங்குதல், பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் ஜனாதிபதி அவர்களினால் அடையாளப்படுத்தப்பட்டன.
மகாசங்கத்தினர் உள்ளிட்ட மாகாணத்தின் ஏனைய மதத் தலைவர்களும் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன, அமைச்சர் தயா கமகே, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம, முன்னாள் அமைச்சர் பீ.தயாரட்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு