அமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய பெண்
அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையின் போது பெண் ஒருவர் தனது குழந்தையின் கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈஸ்டர் பண்டிகை நாளான நேற்று இலங்கையில் உள்ள 2 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில குண்டுகள் வெடித்ததில் 290 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஈஸ்டரையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதில் பலர் கலந்து கொண்டனர். அப்போது ஒரு பெண் தனது 5 வயது மகள் மற்றும் 10 மாத கைக்குழந்தையுடன் கலந்து கொண்டார்.
அப்போது அந்த பெண் 10 மாத குழந்தையின் கையில் துப்பாக்கியை கொடுத்து விளையாட வைத்தார். அக்குழந்தை துப்பாக்கியை காட்டி சுடுவதுபோல் அங்குமிங்கும் வீசிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்ததும் பிரார்த்தனையில கலந்து கொள்ள வந்தவர்கள் பதட்டமும், பீதியும் அடைந்தனர். சிலர் அந்த பெண்ணிடம் நெருங்கி சென்று அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றனர்.
உடனே அந்த பெண் துப்பாக்கியை காட்டி “எனது அருகே வராதீர்கள். மீறினால் சுட்டு விடுவேன். இந்த தேவாலயத்தை தகர்த்து விடுவேன்” என மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தேவாலயத்தை விட்டு வெளியேறி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு வந்த போலீசார் அப்பெண்ணையும், குழந்தையையும் பிடித்து விசாரித்தனர்.
அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அந்த துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பப்படவில்லை. போலீஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தேவாலயத்தில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.