அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்
அமெரிக்காவின் கணினி வலையமைப்பை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
வெளிநாட்டுகளின் வலையமைப்புகள் அமெரிக்க கணினி வலையமைப்பில் ஊடுறுவுவதை தடுக்கும் வகையில் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அவசர நிலையின் கீழ், வெளிநாட்டு தொலைத்தொடர்பு வலையமைப்புகளை அமெரிக்கா பயன்படுத்த முடியாது. இதுதொடர்பான பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள ட்ரம்ப், நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனங்கள் தொடர்பாக எவ்வித தகவலையும் தெரிவிக்காத நிலையில், சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவியை இலக்குவைத்தே இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஹுவாவி வலையமைப்பை பயன்படுத்தி உலக நாடுகளை உளவுபார்க்கும் நடவடிக்கையை சீனா மேற்கொள்ள சாத்தியம் காணப்படுவதாக அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் அண்மைய காலமாக தெரிவித்து வந்தன. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தமது உற்பத்திகளுக்கு தடைவிதிப்பதும் கட்டுப்பாடு விதிப்பதும் அமெரிக்க பயன்பாட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களையே பாதிக்குமென ஹூவாவி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.