Main Menu

அப்பாவி முஸ்லிம் மக்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது தவறு..!

நாங்கள் எந்த ஒரு  சந்தர்ப்பத்திலும் எல்லா முஸ்லிம் மக்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது தவறு. நாங்கள் நீண்ட காலமாக முஸ்லிம் மக்களுடன் மிகுந்த நற்புறவுடன் வாழ்ந்து வருகின்றோம். ஒரு சிலர் செய்த தீவிரவாத நடவடிக்கையினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சகோதரர்களையும் நாங்கள் சந்தேகத்துடன் பார்ப்பது தவறு என மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் தெரிவித்தார்.

மேலும், அவர் கருத்து தெரிவிக்கையில், இந்நாட்டில் கடந்த மாதம் 21 ஆம் திகதி நாங்கள் யாரும் எதிர் பார்க்காத நிலையில் துன்பகரமான சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என இல்லாமல் எல்லா மதத்தைச் சார்ந்தவர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம். உலக நாடுகளுடன் பார்க்கும் போது எமது இலங்கை நாடு பல்வேறு வளங்களைக்கொண்ட அழகு மிக்க உண்ணதமான நாடாக காணப்படுகின்றது. நாங்கள் ஒவ்வொருவரும் கடந்த 30 வருட கால யுத்தத்தினால் பல்வேறு பாதிப்புக்களையும் இன்னல்களையும் சந்தித்தவர்கள். அதன் கசப்பான மூன்று தசாப்த யுத்தத்திற்கு பிறகு நல்லிணக்கத்துடன் சர்வ மதங்களுக்கிடையில், இனங்களுக்கிடையில் ஒற்றுமையுடன் நமது நாட்டில் வாழ்ந்து வந்தோம்.

நல்லிணக்கத்துடனுடம், சமாதானத்துடனும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வந்த எம்மக்கள் மத்தியில் குறிப்பிட்ட தீவிரவாத கொள்கையுடைய குறிப்பிட்ட சிலரின் செயற்பாட்டினால் இன்று பிளவுகள் ஆரம்பித்துள்ளது. அத்தோடு, நாங்கள் எந்த ஒரு சந்தர்ப்த்திலும் எல்லா முஸ்லிம் மக்களையும் சந்தேகக்கண்ணோடு பார்ப்பது தவறு. நாங்கள் நீண்ட காலம் முஸ்லிம் மக்களுடன் மிகுந்த நற்புறவுடனும் நல்லுறவுடனும் வாழ்ந்து வருகின்றோம் என்பதை மறக்கக்கூடாது என்றார்.

மேலும், சட்டத்தை மீறி செயற்படுகின்றவர்கள் மாத்திரமே பொலிஸாரால் கைது செய்யப்படுவர். அதனை காவற்துறை பார்த்துக்கொள்ளும். மாறாக,  அப்பாவி பொது மக்களை கைது செய்தல் மற்றும் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும், நமது நாட்டில் இருக்கக்கூடிய அவசர கால சட்ட நடவடிக்கைகளுக்கு அமைவாக இனம், மதங்களுக்கு இடையில் பிரிவினை வாதங்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றவர்களை கைது செய்து பல வருடங்களுக்கு தடுத்து வைக்கக்கூடிய கடுமையான சட்டங்கள் நடை முறையில் இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.