அனைத்து முஸ்லிம்களும் இந்த வகாப்வாதத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நினைத்து விட வேண்டாம்

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பின்போது, சஹ்ரான் உள்ளிட்ட தரப்பினர் அன்னப்பறவைக்காகவே வேலை செய்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“அனைத்து முஸ்லிம்களும் இந்த வகாப்வாதத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று நினைத்துவிட வேண்டாம். அப்பாவி முஸ்லிம்களுக்கு அடிப்படைவாதத்தை எதிர்த்துப் போராட பலமும் அதிகாரமும் இன்று இல்லை.
அதற்கு அவர்களுக்கு முதலில், பலத்தை வழங்க வேண்டும். நாட்டிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் இன்று அடிப்படைவாதத்திற்கு அடிபணித்து விட்டார்கள்.
2015 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பில் சஹ்ரான் உள்ளிட்ட தரப்பினருக்கு முக்கிய பங்கு உள்ளது.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு சாட்சி வழங்க வந்திருந்த ஒருவர் கூட, சஹ்ரான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் என்று கூறியிருந்தார்.
இதனால்தான் சஹ்ரானுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டும், எந்தவொரு நடவடிக்கையும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த அடிப்படைவாதத்திற்கு அரசாங்கம்தான் அங்கீகாரத்தையும் சுதந்திரத்தையும் வழங்கிக் கொண்டிருந்தது.
இதனை முஸ்லிம்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த அடிப்படைவாதத்தைப் பயன்படுத்தி நாட்டுக்குள் நுழையவே அமெரிக்காவும் தற்போது முயற்சித்து வருகிறது.
அவர்கள் நாட்டில் களமிறங்கினால், வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில்தான் முகாமிடுவார்கள். திருகோணமலைதான் அவர்களின் பிரதான இலக்காக இருக்கிறது.
எனவே, இந்த ஆபத்தை முஸ்லிம்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் என்று நாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்” என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.