அதிமுக- பா.ஜனதா அரசுகளுக்கு தேர்தலில் தக்க தண்டனை தர வேண்டும்: மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற அ.தி.மு.க.- பா.ஜனதா அரசுகளுக்கு தேர்தலில் தக்க தண்டனை தர வேண்டும் என்று பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று அவர் பாளை, சங்கரன்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பின்பு இரவில் நெல்லை தாழையூத்தில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார். இன்று காலை அவர் தூத்துக்குடி வந்தார்.
அவர் தூத்துக்குடி- நெல்லை நான்கு வழிச்சாலையில் உள்ள மங்களகிரி விலக்கு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து பேசினார்.
வருகிற 18-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் அதையொட்டி நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு ஓடிவந்துள்ளேன். தேர்தலுக்காக மட்டும் வந்துசெல்பவர்கள் அல்ல நாங்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றென கருதி உழைக்கும் உன்னதமான இயக்கம் தி.மு.க.
கலைஞர் இருந்திருந்தால் இன்று உங்கள் முன்னால் வந்து வாக்கு கேட்டிருப்பார். இன்று அவரது மகனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். பிரிட்டிஷ் அரசை எதிர்த்து இந்திய மக்கள் அனைவரும் சேர்ந்து மூச்சுவிட்டாலே போதும் ஓடிவிடுவார்கள் என்றுகூறிய வ.உ.சி. பிறந்த மண் இது.
அனைத்து தொகுதிகளிலுமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுபவர்களை கலைஞரின் பிள்ளையாக கருதி வாக்களிக்க கேட்டு வந்துள்ளேன். இங்கு கலைஞரின் மகள், எனது தங்கைக்காக வாக்கு கேட்கிறேன். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல கனிமொழி கவிஞர், பத்திரிகையாளர், பேச்சாளர், எழுத்தாளர் என ஒவ்வொரு துறையிலும் தனிமுத்திரை பதித்தவர். சமூக போராளி, பாராளுமன்ற டைகர் என பட்டம் பெற்றவர். தூத்துக்குடியில் உங்களுடைய டைகராக அவர் போட்டியிடுகிறார்.
மாநிலங்களவையில் அவர் ஸ்டெர்லைட் பிரச்சனை, நீட்தேர்வு விவகாரம், மரண தண்டனை ஒழிப்பு, மகளிர் இட ஒதுக்கீடு, சமூக நீதி உள்ளிட்ட பல பிரச்சனைகளை வாதாடி, போராடி வெற்றி பெற்றுள்ளார். இவரை விட சிறந்த வேட்பாளர் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.
மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி மாற்றப்பட வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தில் ஒரே நிமிடம் ஏன்? ஒரு நொடியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதற்கு மற்ற தொகுதி மக்களை விட தூத்துக்குடி தொகுதி மக்களுக்கு முக்கிய கடமை உள்ளது.
ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடிய அப்பாவி மக்கள் 13 பேரை துள்ளதுடிக்க சுட்டுக்கொன்ற அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணிக்கு தக்க தண்டனை தர வேண்டும். 100 நாட்களை கடந்து போராடிய மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் போது கலெக்டர் அழைத்து பேசியிருந்தால் இந்த கொடுமை நடந்திருக்காது. மக்களை பழிவாங்கவே துப்பாக்கி சூடு நடத்தியது எடப்பாடி அரசு.
ஸ்டெர்லைட்டை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. எனவே இந்த கொலைகார எடப்பாடி அரசை மக்கள் தூக்கிஎறிய வேண்டும். துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார்? எடப்பாடியா? தலைமை செயலாளரா? பிரதமர் மோடியா?. தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது பெண் ஸ்னோலினை சுட்டுக்கொன்றுள்ளார்கள். அவர் எழுதிய கவிதை புத்தகமாக வந்துள்ளது. காளியப்பன் என்பவரை சுட்டுக்கொல்லும்போது கடைசியில் சினிமாவில் நடிப்பது போல் நடிக்கிறாயா? என கேட்ட கொடுமை இணையத்தில் வந்துள்ளது.
துப்பாக்கி சூடு நடந்ததும், தூத்துக்குடிக்கு வந்து காயம்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறினேன். என் வாழ்நாளில் இப்படிப்பட்ட காட்சிகளை நான் பார்த்ததில்லை. சம்பவம் நடந்த நேரத்தில் முதல்-அமைச்சர் இங்கு வந்தாரா? ஒரு அறிக்கையாவது விட்டாரா? பிரதமர் மோடி இரங்கல் செய்தியாவது கூறினாரா? வடமாநிலத்தில் ஒரு பிரச்சனை என்றால் அறிக்கைவிடுகிறார்.
எனவே தான் அவரை பாசிச மனப்பான்மை கொண்ட பிரதமர் என கூறுகிறோம். இந்த வார்த்தையை தொடங்க காரணமாக இருந்தது தூத்துக்குடி. இந்த தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி வந்தபோது பாசிச மோடி ஆட்சி ஒழிக என கோஷமிட்ட மாணவி சோபியாவை அவதூறாக திட்டி, அவரை கைது செய்ய செய்தார். பாசிச மோடி ஆட்சி என்று மாணவி சோபியா சொன்னதை இன்று நாங்கள் பலமுறை சொல்கிறோம். மோடிக்கு எதிரான முழக்கத்தை முன்வைக்க காரணமாக இருந்த தமிழிசைக்கு நன்றி கூறுகிறோம்.
தூத்துக்குடியில் தமிழிசை போட்டியிடவில்லை, வசமாக மாட்டிக்கொண்டார். இங்குதான் ஸ்டெர்லைட் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, உப்பள பிரச்சனை, தீப்பெட்டி தொழில் பிரச்சனை, சுற்றுச்சூழல் பிரச்சனை உள்ளது. எதற்கும் குரல் கொடுக்காத தமிழிசை, என்ன தைரியத்தில் வந்தார். தோற்பதற்காக வந்தாரா? ஒருவேளை அவரது கட்சியினரே சதி செய்து இங்கு அனுப்பிவைத்தார்களா? ஸ்டெர்லைட் போராட்டத்தை போன்று கூடங்குளம் போராட்டத்திலும் அடக்குமுறையை கையாண்டது இந்த அரசு.
இந்திய பாதுகாப்புக்கு அனைத்தையும் செய்கிறோம் என்கிறார் மோடி. புல்வாமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்டார்களே, இதுதான் பாதுகாக்கும் லட்சணமா? உள்ளூர் பயங்கரவாதிகளுக்கு வெடி பொருட்கள் எப்படி கிடைத்தது? பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அளித்த புள்ளிவிபரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அதிகமான மதக்கலவரங்கள், அதனால் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது.
இதில் நிறைய சம்பவங்கள் நடந்தது பா.ஜனதா செல்வாக்கு மிகுந்த உத்தரபிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா மாநிலங்கள் ஆகும். அதைப்போன்று தமிழகத்திலும் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். தி.மு.க. இருக்கும்வரை அது நடக்காது.
கடந்த 20-ந்தேதியில் இருந்து நான் பிரசாரத்தை தொடங்கியது முதல் 3 கேள்விகளை கேட்டுள்ளேன். ஜெயலலிதா மரணம் எப்படி நடந்தது? அது மர்மமரணம் என்று அ.தி.மு.க.வை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே கூறியுள்ளார். அப்போது மர்ம மரணம் என்று கூறியவர் அதுதொடர்பாக விசாரணை கமிஷனில் 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன்? ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். எனவே அவரது மரணம் குறித்து பேச எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு தகுதி உண்டு. இந்த கேள்விக்கு இதுவரை பதில் வரவில்லை.
கொடநாட்டில் கொள்ளை முயற்சியில் நடந்த கொலைகளுக்கு யார் பின்னணி? 3-வதாக பொள்ளாச்சியில் 7 வருடமாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள். அந்த கொடுமையை படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தவர்கள் யார்? உளவுத்துறை இதை முன்கூட்டியே சொல்லாதது ஏன்? இதற்கு காரணமான அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். எனது இந்த 3 கேள்விகளுக்கு இதுவரை பதில் வரவில்லை.
இந்த ஆட்சியில் பெண்களுக்கு நடந்த கொடுமை மோடியின் கண்களுக்கு தெரியவில்லையா? தெரியும். அதனால் தான் அவரை பாசிச பிரதமர் என்கிறோம்.
வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதிக்கும் இடைத்தேர்தல் முடிந்தவுடன் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மாநிலத்தில் எடப்பாடி ஆட்சி தூக்கிஎறியப்படும். தமிழக சட்டமன்றத்தில் இப்போது தி.மு.க.வுக்கு 88 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்கள், முஸ்லீம் லீக் 1 என தி.மு.க. அணியில் 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளன. 22 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் அவை 119 ஆக உயரும். 117 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்த மோடி எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் தற்போது தேர்தல் அறிக்கையில் கனவுகள், கற்பனைகள் காகிதங்களில் கொடுத்துள்ளார். 5 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்று சொல்ல முடியவில்லை. முதலில் மக்களின் தேவையை நிறைவேற்றியதாகவும், தற்போது மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகவும் கூறியுள்ளீர்கள். இப்போது மக்களின் விருப்பம் நீங்கள் வீட்டுக்கு போகவேண்டும் என்பதுதான். தி.மு.க. தேர்தல் அறிக்கை மிக தெளிவாக உள்ளது.
தி.மு.க. வெற்றி பெற்றதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை கொள்கை முடிவெடுத்து சிறப்பு சட்டம் இயற்றி நிரந்தரமாக மூடுவோம். துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். தூத்துக்குடியின் விமான நிலையம் மேம்படுத்தப்படும். சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும். மழைக்காலங்களில் உப்பள தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் நிரந்தர தீர்வு காண தனி ஆணையம் அமைக்கப்படும். மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். கடலோர பகுதிகள் புயல் பாதிப்புகளில் இருந்து நிரந்தரமாக பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் ஒரு சில பிரிவுகளை தேவேந்திரர் என அழைக்க தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மூலம் தீர்வு காணப்படும். 50 லட்சம் மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கேபிள் டி.வி. கட்டணம் குறைக்கப்படும். மாணவர்களின் கல்வி கடன், விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும். கலைஞர் கூறியது போல நாங்கள் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம். எனவே உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.