Omicron கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து வருகைத் தந்தவர்கள் குறித்து ஆராய்வு – சுதர்ஷனி
புதிய Omicron கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் எந்தவொரு தனிநபரோ அல்லது தரப்பினரோ இலங்கைக்கு விஜயம் செய்தார்களா என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சுகாதார அமைச்சின் குழுநிலை விவாதத்தின்போது கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புதிய Omicron மாறுபாட்டின் அபாயம் உள்ள 15 நாடுகளில் இருந்து வரும் பார்வையாளர்களை இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) முதல் தடை விதித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய மாறுபாட்டைக் கண்டறிய கண்காணிப்பு மற்றும் மரபணு வரிசை முறைகள் பின்பற்றப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
மாறுபாட்டின் பரவலின் அபாயத்தையும் அது இறப்பு விகிதத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் உலக சுகாதார அமைப்பு இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் நோயாளியின் மேலாண்மை மற்றும் சிகிச்சை முறைகள் மற்ற வகைகளைப் போலவே உள்ளன, மேலும் முகமூடி அணிவது, ஒரு மீட்டர் தூரத்தை பராமரிப்பது மற்றும் தடுப்பூசிகளைப் பெறுவது போன்ற சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது முக்கியம் என்று WHO எடுத்துரைத்ததாக அமைச்சர் கூறினார்.
இலங்கையில் மொத்த சனத்தொகையில் சுமார் 62.7% பேர் ஏற்கனவே முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.