2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை நாடளாவிய போராட்டம்!
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச துறை ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் நாளை (23) நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.
வரவு செலவுத் திட்டத்தில் அரச துறை ஊழியர்களின் கோரிக்கைகளுக்குப் போதிய தீர்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, அரச துறை தொழிற்சங்கங்கள் ஏற்கனவே பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, நாளை நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன.
இதேவேளை, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக நாளை முதல் போராட்டங்களை முன்னெடுக்க ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் நாளை கறுப்புப் பட்டிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் அமில சந்தருவன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பதிலைப் பொறுத்து, அடுத்த வாரம் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை வேலைநிறுத்தப் போராட்டமாகத் தீவிரமடையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கத் தவறினால், எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை மூடும் நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
