பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாட்டை விட்டு வெளியேற நிதியுதவி
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட குடும்பங்கள் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறினால், 40 ஆயிரம் பவுண்ஸ் வரை நிதியுதவி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை விரைவாகத் திருப்பி அனுப்பும் நோக்கில் உள்துறை அமைச்சு இந்த நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய குடும்பங்களில் ஒருவருக்கு 10 ஆயிரம் பவுண்ஸ் வீதம், அதிகபட்சமாக 40 ஆயிரம் பவுண்ஸ் வரை வழங்கப்படவுள்ளது.
இந்தச் சலுகையை ஏற்றுக்கொள்வது தொடர்பில் முடிவெடுக்க ஏழு நாட்கள் மாத்திரமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், பிரித்தானியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் பணம் வழங்கப்படாது. சொந்த நாட்டைச் சென்றடைந்த பின்னர் முன்பணம் செலுத்தப்பட்ட அட்டையின் ஊடாக நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்டமாக சுமார் 150 குடும்பங்களை இலக்காகக் கொண்ட இந்த முன்னோடித் திட்டம், தன்னார்வ வெளியேற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
