வான்வழிப் பயணத்தில் புதிய அத்தியாயம்: ட்ரோன் சோதனை
இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கான ட்ரோன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடி நடவடிக்கையாக, கொழும்பு துறைமுக நகரில் பயணிகள் ட்ரோன்களின் சோதனைப் பறப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி உத்தியோகபூர்வ செயல்விளக்கம் நடத்தப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்தச் சோதனைப் பறப்புகள் இடம்பெறுகின்றன.
சீனாவின் விமானத் தொழில்நுட்ப நிறுவனமான EHang Holdings இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் செங்குத்தாக மேலெழுந்து தரையிறங்கக்கூடிய (eVTOL) விமானத் தொழில்நுட்பத்தில் இந்நிறுவனம் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாத்துறை மற்றும் சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றுக்குப் பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.
பயணிகள் ட்ரோன்கள் நகர்ப்புற வான்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குப் புதிய பயண அனுபவங்களை வழங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்பதை எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள செயல்விளக்க நிகழ்வில் எடுத்துக்காட்ட எதிர்பார்க்கப்படுவதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தத் தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை, EHang Holdings நிறுவனம் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகிறது.
இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட முதலாவது விமானம், இந்த முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்கனவே இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவசர மருத்துவப் போக்குவரத்து மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கான சரக்குப் போக்குவரத்து போன்ற தேவைகளுக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவைகளைப் பரவலாக அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், அதன் செயற்பாட்டுத் திறன்களை மதிப்பிடுவதற்கான வாய்ப்பாக நவம்பர் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள செயல்விளக்க நிகழ்வு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
