Main Menu

தீபாவளி ஒளியில் ஒற்றுமை மலரட்டும் – பிரதமர் தீபாவளி வாழ்த்து

இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்துக்களுக்கும் தீபாவளித் திருநாள் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம், செழிப்பு நிறைந்த நாளாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமசூரிய தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இருளை அகற்றி ஒளியை ஏந்தி, தீமைக்கு எதிராக நன்மை பெற்ற வெற்றியைக் குறிக்கும் தீபாவளித் திருவிழா, ஆன்மிகத் தூய்மை நிறைந்த ஒரு மங்கலத் திருநாளாகும்.

விளக்கேற்றுவதால் வீடுகள் ஒளிமயமாவதைப் போல, எமது உள்ளங்களிலுள்ள வெறுப்பு, பொறாமை, அறியாமை என்னும் இருளைப் போக்கி, ஞானத்தினதும் கருணையினதும் ஒளியை ஏற்றுவதற்கு இந்த உன்னத நாள் எமக்குச் சிறந்ததொரு வாய்ப்பை வழங்குகின்றது.

இலங்கையைப் போன்ற பல்லினம், பல்சமயம், பல்கலாசாரம் கொண்ட நாட்டில், தீபாவளித் திருவிழா எமக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மேலும் உறுதிப்படுத்திக்கொள்வதற்குக் கிடைத்த ஒரு மாபெரும் சந்தர்ப்பமாகும் என நான் கருதுகின்றேன்.

பன்மைத்தன்மை நிறைந்த எமது கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தி, இன, மத, சாதி பேதமின்றி ஒரே தாய்நாட்டின் மக்களாக முன்னோக்கிச் செல்வதற்கு இத்தீபாவளித் திருநாளில் நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும்.

அந்த வகையில், இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்துக்களுக்கும் தீபாவளித் திருநாள் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம், செழிப்பு நிறைந்த நாளாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன் – என்று குறிப்பிட்டுள்ளார்.

May be an image of one or more people and text