உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த எந்த தடை இல்லை – தமிழர் விவகாரம் குறித்து தெளிவுபடுத்திய அமைச்சர்
எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கும், அந்த அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்துவதற்கும் அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்காது என அவர் குறிப்பிட்டார்.
எமது சூரியன் செய்திப் பிரிவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, நினைவேந்தல் நடவடிக்கைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, தடை செய்யப்பட்ட அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை என்றும், அவ்வாறான செயற்பாடுகள் சட்டவிரோதமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், யுத்தத்தில் உயிரிழந்த தமது தாய், தந்தை, பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களின் நினைவாக விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதற்கும் எவருக்கும் தடையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், தமிழர் நினைவேந்தல் நடவடிக்கைகளைத் தடைசெய்வதே அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என்றும், சட்டத்திற்கு முரணான வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சில அரசியல் தரப்பினர் இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி தமிழ் – சிங்கள மக்களிடையே இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவருக்கும் ஒரே சட்டமே நடைமுறைப்படுத்தப்படும் என்றும், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உயிரிழந்த உறவினர்களை நினைவுகூருவதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இதேவேளை, அண்மையில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை குறித்தும் இதன்போது விளக்கமளித்தார்.
அதற்கமைய, அந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து விளக்கங்களைப் பெற்று மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால சூரியன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.
