மனிதப் பயன்பாட்டிற்கு அனுமதியில்லாத மருந்து இணையத்தில் விற்பனை
பிரித்தானியாவில், உடல் எடையைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும், ரெட்டாட்ருடைட் (Retatrutide) என்ற, பரிசோதனை நிலையில் உள்ள மருந்து, சமூக ஊடகங்கள் மூலம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் இந்த மருந்து, பிரித்தானியாவில் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுவதாக ஸ்கை நியூஸ் (Sky News) தெரிவித்துள்ளது.
இந்த மருந்து தொடர்பான ஆர்வம் சமூக ஊடகங்களில் அதிகரித்துள்ள நிலையில், உரிய அனுமதியின்றி இயங்கும் சில ஆய்வகங்கள் இதனைத் தயாரித்து விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த மருந்துக்கு, இதுவரை எந்தவொரு நாட்டிலும் மனிதப் பயன்பாட்டிற்காக அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
