மக்களின் விருப்பம் அல்லது வெறுப்பைப் பொருட்படுத்தாமல், நாட்டிற்குத் தேவையான நிதிக் கொள்கைகள் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக மத்திய வங்கி ஏற்கனவே கடினமான தீர்மானங்களையும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், நாட்டின் தேவைக்கேற்ப இத்தகைய கொள்கைகளை எதிர்காலத்திலும் நடைமுறைப்படுத்த பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் விருப்பத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான தீர்மானங்களை நடைமுறைப்படுத்தத் தவறினால், இறுதியில் முழு நாட்டிற்கும் கடுமையான பாதிப்பே ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் தேவைக்கு ஏற்ப வரி விகிதங்களை உயர்த்த வேண்டியிருந்த போதிலும், பெரும்பாலான மக்கள் வரி அதிகரிப்பை விரும்புவதில்லை என ஆளுநர் குறிப்பிட்டார். இத்தகைய கடினமான தீர்மானங்கள் காரணமாக சமூகத்தில் எதிர்ப்புகள் எழுந்து சில ஸ்திரமற்ற சூழ்நிலைகள் உருவாகக்கூடும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, வரிகளைக் குறைப்பது அல்லது அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து மக்களுக்குச் சரியாகத் தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று ஆளுநர் தெரிவித்தார்.
இதன் மூலம் மக்களை விழிப்புணர்வடையச் செய்து, இக்கொள்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டார்.
வரி திருத்தங்களைச் சரியான நேரத்தில் மேற்கொள்வதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய மத்திய வங்கி ஆளுநர், வரிகள் உயர்த்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒரு குழுவினர் சமூகத்தில் இருப்பார்கள் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரத்தைச் சிறிதளவேனும் ஸ்திரமாக வைத்திருக்க முடிந்தமைக்கு, பிரபலமற்றவையாக இருப்பினும் நாட்டிற்கு அத்தியாவசியமான தீர்மானங்களைச் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தியதே காரணம் என்றும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
