அயர்லாந்தில் குமார் சங்கக்கார எதிர்கொண்ட கசப்பான அனுபவம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் அவரது குடும்பத்தினர் அயர்லாந்தின் டப்ளின் (Dublin) விமான நிலையத்தில் அசௌகரியமான மற்றும் விரும்பத்தகாத அனுபவமொன்றை எதிர்கொண்டுள்ளனர்.
‘ரயான்-எயார்’ (Ryanair) விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் அவரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக தனது X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள குமார் சங்கக்கார, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நேர்ந்த இந்த அனுபவத்தை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதனால் தான் மிகவும் மனவேதனை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
‘ரயான்-எயார்’ ஊழியர்கள் தங்களை நடத்திய விதம் மிகவும் பொருத்தமற்றதாக இருந்ததுடன், உரிய நடைமுறைகளும் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
எனினும், இந்தச் சம்பவத்திற்கான குறிப்பிட்ட பின்னணி அல்லது காரணம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
எந்தவொரு பயணிக்கும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் குமார் சங்கக்கார தனது பதிவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
