இலங்கையில் 2.1 டிரில்லியன் ரூபாய் வரி நிலுவை – IMF தகவல்
இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் (IRD) வசூலிக்கப்பட வேண்டிய நிலுவை வரித் தொகை, 2025 ஆம் ஆண்டு இறுதியில் சுமார் 2.1 டிரில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அண்மைய தொழில்நுட்ப உதவி அறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, குறித்த நிலுவை வரித் தொகையில் சுமார் 1.6 டிரில்லியன் ரூபாய், மேன்முறையீடுகள் அல்லது ஏனைய சட்டரீதியான முரண்பாடுகளுக்கு உட்பட்ட வரி மதிப்பீடுகளுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் மொத்த நிலுவை வரித் தொகை சுமார் 1.1 டிரில்லியன் ரூபாயாகக் காணப்பட்டதுடன், அதில் சுமார் 947 பில்லியன் ரூபாய் மேன்முறையீடுகள் மற்றும் ஏனைய முரண்பாடுகளுக்கு உட்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, நிலுவை வரிகளை வசூலிப்பதில் மேன்முறையீடுகளே மிகப்பெரிய தடையாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, எவ்வித முரண்பாடுகளுக்கும் உட்படாத நிலுவை வரிகள்கூட நீண்டகாலமாக வசூலிக்கப்படாமல் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணியாளர் பற்றாக்குறை, வசூல் நடவடிக்கைகளுக்கான முன்னுரிமை வழங்குவதில் காணப்படும் பலவீனம் மற்றும் வசூலிக்கக்கூடிய கடன்களை அடையாளம் காண்பதற்கான இடர் அடிப்படையிலான கட்டமைப்பு இல்லாமை ஆகியவை இதற்கான காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் பெறுமதி சேர் வரிச் சட்டம் ஆகியவற்றின் கீழ், வசூலிக்க முடியாத வரிக் கடன்களை நேரடியாகத் தள்ளுபடி செய்வதற்கான அதிகாரம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு இல்லை எனவும், அவ்வாறான கோரிக்கைகள் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள சில வரிக் கடன்களை வசூலிப்பதற்கான போதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும், அவை மேன்முறையீடுகள் அல்லது ஏனைய முரண்பாடுகளுக்கு உட்படாத சந்தர்ப்பங்களிலும் இந்த நிலை காணப்படுவதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, நிலுவை வரிகளை அவை செலுத்தப்படாமல் உள்ள காலப்பகுதி, மேன்முறையீடுகள் அல்லது முரண்பாடுகளுக்கு உட்பட்டுள்ளமை, மீள வசூலிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்கான நிர்வாகச் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தும் இடர் அடிப்படையிலான வரி நிலுவை முகாமைத்துவக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது.
இதன் மூலம் வசூலிக்கக்கூடிய வரி நிலுவைகளுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், குறைந்த பெறுமதியுடைய நிலுவைகள், முரண்பாடுகளுக்கு உட்பட்ட தொகைகள் மற்றும் வசூலிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ள அல்லது நிர்வாக ரீதியாக வசூலிப்பது சாத்தியமற்ற கடன்களைத் தனித்தனியாக முகாமைத்துவம் செய்ய முடியும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
