Main Menu

அத்துமீறிய மீன்பிடி; 7 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னாருக்கு வடக்கே அமைந்துள்ள இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களும் இன்று (01) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, தலைமன்னாருக்கு வடக்கே அமைந்துள்ள இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை வடமத்திய கடற்படை கட்டளையகம் கண்காணித்தது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ஒரு இந்திய மீன்பிடிப் படகுடன் அதிலிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களும் இவ்வாறு க‍ைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடிப் படகும், இந்திய மீனவர்களும் தலைமன்னார் இறங்குதுறைக்கு அழைத்து வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.