Main Menu

23 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானம் வழங்கத் தடை – கேரளாவில் புதிய கட்டுப்பாடு

கேரளாவில் 23 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபானசாலைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வயதை உறுதிப்படுத்துவதற்காக, தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களைப் பரிசோதிக்குமாறு மாநில மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

வயது குறைவாகத் தோற்றமளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் வழங்குவதற்கு முன்னர், அவர்களின் வயதை உறுதிப்படுத்தும் அடையாள ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் மதுபானசாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மதுவரித் துறை அமைச்சர் எம். லிஜு எச்சரித்துள்ளார்.

கொச்சி நெடும்பாசேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயதுடைய சுஹைல் சஜீவ் என்பவர் உயிரிழப்பை ஏற்படுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞருக்கு வயதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதனையும் பரிசோதிக்காமல் மதுபானம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, 23 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்கும் மதுபானசாலைகளின் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் புதிய மதுபானக் கொள்கையை உருவாக்கி வருவதாகவும், கேரள உயர் நீதிமன்றத்தில் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக எதிர்வரும் நவம்பர் மாதம் புதிய கொள்கை அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.