இலங்கை – துருக்கி இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த அர்ப்பணிப்பு: அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ
துருக்கிக் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டதன் 103 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 29 ஆம் திகதி நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், பொருளாதார ஒத்துழைப்பை விரிவாக்கவும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளதாக வலியுறுத்தினார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பில் துருக்கி ஜனாதிபதி ரஜேப் தய்யிப் எர்டோகன் (Recep Tayyip Erdoğan), துருக்கி அரசாங்கம் மற்றும் மக்களுக்குத் தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த கலாநிதி பெர்னாண்டோ, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான தொடர்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்தவை எனக் குறிப்பிட்டார்.
1948 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தகப் பாதைகள் ஊடாக இரு நாட்டு மக்களுக்குமிடையிலான தொடர்புகள் அதற்கு முன்னரே நிலவியதாகச் சுட்டிக்காட்டினார்.
2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவின் பின்னர் இலங்கைக்குத் துருக்கி வழங்கிய உதவிகளுக்கும், இலங்கையின் பொருளாதார மீட்சிச் செயற்பாடுகளுக்கு வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்கும் கலாநிதி பெர்னாண்டோ நன்றி தெரிவித்தார். ‘தித்வா’ சூறாவளிக்குப் பின்னரான புனரமைப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கத் துருக்கி விருப்பம் தெரிவித்துள்ளமையையும் பாராட்டிய அவர், 2023 ஆம் ஆண்டு துருக்கியைத் தாக்கிய அழிவுகரமான நிலநடுக்கத்தின் போது இலங்கையும் துருக்கியுடன் ஒற்றுமையாக நின்றதை நினைவுகூர்ந்தார்.
வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை, வேலைவாய்ப்பு, புதுப்பிக்கத்தக்க சக்தி, விருந்தோம்பல் சேவைகள், விவசாய உற்பத்திச் செயன்முறை, ஜவுளித் தொழில் மற்றும் கடல்சார் போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் சிறப்பு முதலீட்டு மண்டலங்கள் உட்பட இலங்கையிலுள்ள முதலீட்டு வாய்ப்புகளைப் ஆராயுமாறு துருக்கி முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
துருக்கிய விமான சேவையின் நேரடி விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமையும் விரிவாக்கப்பட்டமையும் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தகத் தொடர்புகள் வளர்ச்சியடைவதற்குக் பங்களித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன் புதுப்பிக்கத்தக்க சக்தி, கச்சா எண்ணெய், படகு உற்பத்தி, கடற்போக்குவரத்து மற்றும் ஜவுளித் தொழில் ஆகிய துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக ‘பெந்தோல்’ (Penthol) குழுமம் அண்மையில் மேற்கொண்ட விஜயத்தையும் அவர் பாராட்டியிருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தொடர்புகள் குறித்துக் கருத்து தெரிவித்த கலாநிதி பெர்னாண்டோ, 15 ஆம் திகதி அஸர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற ஆசியாவில் பரஸ்பர தொடர்பு மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த 7 ஆவது மாநாட்டின் (CICA) இடையே இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் நடைபெற்ற சந்திப்பை நினைவுகூர்ந்தார்.
இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் துருக்கிக்கான விஜயத்தின் போது வெளிநாட்டலுவல்கள், வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழிலாளர் பாடப் பொறுப்புடைய துருக்கியின் பிரதி அமைச்சர்களுடன் பலனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான இரண்டாம் கட்ட அரசியல் கலந்தாய்வுப் பேச்சுவார்த்தைகள் 2026 மே 05 ஆம் திகதி அங்காரா நகரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும் புதிய ஒத்துழைப்புத் துறைகளை அடையாளம் காணவும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
திறன் அபிவிருத்தி மற்றும் அறிவுப் பகிர்வுக்காகத் துருக்கி வழங்கும் உதவிகளையும் கலாநிதி பெர்னாண்டோ பாராட்டியுள்ளார்.
இலங்கை பாதுகாப்பு சேவைகள் தளபதி மற்றும் படைப்பிரிவு கல்லூரியின் 20 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் துருக்கியில் இரண்டு வார கால சர்வதேச ஒத்துழைப்புப் படிப்புத் திட்டத்தில் பங்கேற்றதாகக் குறிப்பிட்ட அவர், அத்திட்டத்திற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தமைக்காகத் துருக்கியின் வெளிநாட்டலுவல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சுகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இலங்கை மாணவர்களுக்குத் துருக்கியின் முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்பதற்காக அரசாங்க நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில்களை வழங்குவதையும் அவர் பாராட்டியுள்ளார். இத்தகைய வாய்ப்புகள் மனிதவள மேம்பாட்டிற்குப் பங்களிப்பதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.
துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகவர் நிலையத்தின் ஊடாக நீண்டகாலப் புனரமைப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்துத் துருக்கி பரிசீலித்து வருவதையும் கலாநிதி பெர்னாண்டோ பாராட்டியுள்ளார். பேரழிவின் அளவு மற்றும் பிராந்திய தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, உதவிகளுக்கான முன்னுரிமைப் பகுதிகளை அடையாளம் காணத் தொடர்புடைய இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுமாறும் அவர் ஊக்கப்படுத்தினார்.
அரசியல், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி, திறன் அபிவிருத்தி, மனிதநேய உதவி, பாதுகாப்பு மற்றும் பலதரப்புத் துறைகள் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்க இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளதாக கலாநிதி பெர்னாண்டோ வலியுறுத்தினார்.
இரு நாடுகளின் தனியார் துறைகளுக்கு இடையே கூட்டு முயற்சிகள் மற்றும் பங்கான்மைகளை ஊக்குவிப்பதன் மூலம் இரு நாட்டு மக்களுக்குமான பொருளாதாரச் செழிப்பை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக, துருக்கிக் குடியரசின் இரண்டாவது நூற்றாண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளைக் கண்டறிய இலங்கை தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
நிகழ்வின் இறுதியில் துருக்கி ஜனாதிபதி ரஜேப் தய்யிப் எர்டோகனின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காகவும், துருக்கிக் குடியரசு மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காகவும், இலங்கை மற்றும் துருக்கி இடையிலான நட்புறவு, பங்கான்மை மற்றும் ஒத்துழைப்பு மேலும் வலுவடைவதற்காகவும் கலாநிதி பெர்னாண்டோ மதுக்கோப்பை ஏந்தி வாழ்த்துத் தெரிவித்தார்.





