Main Menu

ஏர்பஸ் வழக்கு: நாமலை நவம்பர் 19 முன்னிலைப் படுத்த நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர ட்ரையல்-அட்-பார் நடுவர்கள் குழு இன்று (28) உத்தரவிட்டது.

இந்த வழக்கின் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ இன்று நிரந்தர மேல் நீதிமன்ற குழு (Permanent High Court Trial-at-Bar) முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, ​​இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம செவ்வாய்க்கிழமை (27) பிறப்பித்த உத்தரவின் பேரில் நாமல் ராஜபக்ஷ முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அந்த உத்தரவின்படி, அவர் ‘ட்ரயல்-அட்-பார்’ (Trial-at-Bar) எனப்படும் சிறப்பு நீதிமன்ற அமர்வின் முன் முன்னிலையாகும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும்.

இந்த வழக்கு, சர்ச்சைக்குரிய ஏர்பஸ் பரிவர்த்தனையுடன் தொடர்புடைய பணமோசடி மற்றும் 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பானது.

தலைமை நீதிபதியின் அனுமதியுடன், நாமல் ராஜபக்ஷ மற்றும் மேலும் மூவர் மீது நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வில் (Permanent High Court Trial-at-Bar) குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகையில் 24 குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், 59 சாட்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்த வழக்கு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் ‘ட்ரயல்-அட்-பார்’ (Trial-at-Bar) அமர்வுக்கு மாற்றப்படவுள்ள நிலையில், கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்திலான நடவடிக்கைகள் அதன்பின் முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ‘ட்ரயல்-அட்-பார்’ அமர்வில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஒக்டோபர் 30-ஆம் திகதி நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கொழும்பு தலைமை நீதவான் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.