சீரற்ற வானிலையால் 21,218 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களில் 5,696 குடும்பங்களைச் சேர்ந்த 21,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
அந்த நிலையம் வெளியிட்டுள்ள அண்மைய நிலவர அறிக்கையின்படி, 17 மாவட்டங்களில் உள்ள 109 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர். மேலும், மூவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, இரண்டு வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளதுடன், மேலும் 462 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அதேவேளை, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 173 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவுவதால், நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
