Main Menu

தேர்தல் ஆணையாளருக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததல்ல – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

தேர்தல் ஆணையாளருக்கு எதிராகத் தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரும் மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல எனத் தெரிவித்து, தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையாளர் தனது அதிகாரத்தைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டி ராகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த வழக்கில், தேர்தல்கள் ஆணைக்குழு இந்தப் பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அத்துடன், தன் மீதான குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானங்கள் மூன்று உறுப்பினர்களின் ஏகமனதான ஒப்புதலுடன் எடுக்கப்பட்டதாகவும், அவசரமான விடயங்களில் தேர்தல் ஆணையாளர்கள் மின்னணு முறையில் ஒப்புதல் வழங்குவதாகவும், பின்னர் அந்த ஒப்புதல்கள் கோப்புகளில் பதிவு செய்யப்படுவதாகவும் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது.

மேலும், வாக்காளர் இடாப்பில் புதிதாகப் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6இல் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறப்பு தீவிர வாக்காளர் இடாப்புத் திருத்தப் பணிக்காகப் பயன்படுத்தப்படும் மேலதிக உறுதிமொழிப் படிவம் தனியான ஆவணம் எனவும், இணையத்தளத்தில் அது காட்சிப்படுத்தப்பட்ட விதம், படிவத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், 2025 ஜூன் 24, ஒக்டோபர் 27 மற்றும் 2026 மே 14 ஆகிய திகதிகளில் வெளியிடப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் இடாப்புத் திருத்தம் தொடர்பான மூன்று உத்தரவுகளும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏகமனதான தீர்மானங்களின் அடிப்படையிலேயே பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.