Main Menu

எகிப்திய மம்மிகளின் உடலங்களைப் பொதுக் காட்சியிலிருந்து ஸ்கொட்லாந்து அருங்-காட்சியகங்கள் நீக்கியுள்ளன

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரிலுள்ள இரண்டு அருங்காட்சியகங்கள், மனித உடலங்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் நெறிமுறைகளைக் கருத்திற்கொண்டு எகிப்திய மம்மிகளின் உடலங்களைப் பொதுக் காட்சியிலிருந்து நீக்கியுள்ளன.

கெல்விங்ரோவ் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பண்டைய எகிப்திய மதகுரு நெக்ட்டின் (Nekht) மம்மி உடலம் காட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. தி ஹண்டேரியன் அருங்காட்சியகத்தில் உள்ள லேடி ஷெப்-என்-ஹோரின் உடலம் விசேடமாக வடிவமைக்கப்பட்ட துணியால் மூடப்பட்டுள்ளது.

மறைந்தவர்களின் உடலங்களைப் பாதுகாப்பதற்கும் அவற்றின் கண்ணியத்தை மதிப்பதற்கும் தங்களுக்கு உள்ள பொறுப்பை மறுபரிசீலனை செய்த பின்னரே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக இரு அருங்காட்சியகங்களும் தெரிவித்துள்ளன.

அருங்காட்சியகங்களுக்கான சர்வதேச பேரவை (ICOM) தனது நெறிமுறைகளைத் திருத்தி, மனித உடலங்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கி.மு. 1985 முதல் 1797 வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவரது உடலம் மத்திய எகிப்தின் பெனி ஹசன் பகுதியில் கண்டெடுக்கப்பட்டு, 1923ஆம் ஆண்டு கிளாஸ்கோவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

லேடி ஷெப்-என்-ஹோரின் உடலம் சவப்பெட்டியிலிருந்து அகற்றப்படவில்லை. எனினும், அவரது உடலத்தை மரணத்திற்குப் பின்னரும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்ற நோக்கில் அதனை மூடுவதற்குத் தீர்மானித்ததாக தி ஹண்டேரியன் தெரிவித்துள்ளது. அவரது அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி தொடர்ந்து காட்சிப்படுத்தப்படும்.

இதற்கிடையில், ஸ்கொட்லாந்தின் தேசிய அருங்காட்சியகங்கள் தமது சேகரிப்பிலுள்ள மனித உடலங்களைப் பொதுக் காட்சியில் வைப்பது தொடர்பில் தற்போது மாற்றங்களைச் செய்யும் திட்டம் இல்லை எனத் தெரிவித்துள்ளன. இதனால், அந்நாட்டின் அனைத்து அருங்காட்சியகங்களும் ஒரே அணுகுமுறையைப் பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது.

திருத்தப்பட்ட ICOM நெறிமுறைகளின்படி, மனித உடலங்களின் சந்ததியினர் அல்லது அவற்றுடன் தொடர்புடைய சமூகங்களுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். எனினும், அனைத்து உடலங்களையும் காட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என இந்த நெறிமுறைகள் கட்டாயப்படுத்தவில்லை என ICOM நெறிமுறைக் குழு உறுப்பினர் பேராசிரியர் ஸ்டெப் ஸ்கோல்டன் தெரிவித்துள்ளார்.