வெளிநாடுகளில் குடியேறும் பாகிஸ்தான் அரசு உயர் அதிகாரிகள்: பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கவலை
பாகிஸ்தானின் அரசு உயர் அதிகாரிகள் சொந்த நாட்டின் மீது நம்பிக்கையை இழந்து வெளிநாடுகளில் குடியேறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசு இருந்தாலும், அதன் அதிகாரத்துவ அமைப்புகள் அந்நாட்டு ராணுவத்தின் பெரும் நிழலின் கீழ் இயங்குகின்றன. வரலாற்று ரீதியாக ராணுவம் அரசின் ஒரு முக்கியப் பங்குதாரராகவும், பல சமயங்களில் நாட்டின் அரசியல் அமைப்பில் ஒரு முதன்மை சக்தியாகவும் இருந்து வந்துள்ளன. இந்த சூழலில் பாகிஸ்தானின் ஆட்சி நிர்வாகத்தில் ராணுவத் தளபதி அசிம் முனீரின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக அண்மைக் காலமாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தானின் ஆளும் வர்க்கத்தினர் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீது நம்பிக்கையை இழந்து, அண்டை நாடுகளில் குடிபெயர்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தில் உள்ள பல அதிகாரிகள் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைத் தங்கள் நிரந்தர வசிப்பிடங்களாக ஆக்கிக்கொண்டனர். அதிகாரிகளின் விருப்பமான இடங்களில் ஒன்றாக போர்ச்சுகல் உருவெடுத்துள்ளது. அவர்கள் (அதிகாரிகள்) பாகிஸ்தான் அரசில் பணியாற்றியபோது, ஒரு திட்டத்தின் கீழ் இதற்காகத் தயாரானார்கள்.
இது, அவர்களின் பதவிக்காலத்தில் தாய்நாட்டின் மீதும் தங்கள் பதவிகளின் மீதும் அவர்கள் கொண்டிருந்த அர்ப்பணிப்பு குறித்து கேள்விகளை எழுப்புகிறது. மேலும், அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெற்றுக்கொண்டே, சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான வழிகள் இரண்டின் மூலமும் செல்வம் குவிப்பதற்கான வாய்ப்புகளை அனுபவித்த அதிகாரிகளின் நடத்தையும் பல சந்தேகங்களை எழுப்புகிறது.
வெளிநாடுகளில் குடிபெயர்ந்த அதிகாரிகள் முக்கிய பதவிகளை வகித்தவர்கள். அடுத்தடுத்து வந்த அரசுகளுக்கு நெருக்கமானவர்களாக இருந்தவர்கள். இந்த அதிகாரிகளுக்கு நிரந்தர வசிப்பிட ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த நபர், அவர்களிடமிருந்து கணிசமான தொகையைப் பெற்றுக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
