Main Menu

நித்தியானந்தாவின் தியான பீடத்தில் புதுச்சேரி அமைச்சர்- வெளியான காணொளியால் சர்ச்சை

இந்தியாவில் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள நித்தியானந்தாவின் புதுச்சேரி தியான பீடத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸும் கலந்துகொண்ட காணொளி வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் பெண் சீடர்கள் முன்வைத்த தவறான முறையில் நடந்துகொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும், குஜராத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் குழந்தைகள் சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளின் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முன்னிலையாகாத நிலையில், நித்தியானந்தா இந்தியாவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ‘கைலாசா’ என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், புதுச்சேரியில் உள்ள தனது தியான பீடத்தில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக நித்தியானந்தா வருகை தரும்போது பாதுகாப்பு வழங்குமாறு அவரது சீடர்கள், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்ததாகத் தகவல்கள் வெளியாகின.

தற்போது வெளியாகியுள்ள காணொளியில், தியான பீடத்துக்கு வருகை தந்த அமைச்சர் நமச்சிவாயமும், சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸும், காணொளி மூலம் உரையாடிய நித்தியானந்தாவை வணங்குகின்றனர்.

இதன்போது, இருவரையும் வரவேற்ற நித்தியானந்தா, அவர்களின் வருகைக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.