பிரேமலால் ஜயசேகரவிற்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிப்பு
நீதிமன்றத்தில் ஆஜராகாத முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டு உயர்நீதிமன்றம் இன்று (21) திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடாகக் குறித்த பிடியாணைப் பிறப்பிக்குமாறு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அதனை விரைவாகச் செயற்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கும் உத்தரவிட்டது.
இன்று நீதிமன்றத்தில் ஆஜரான ஏனைய இரண்டு பிரதிவாதிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கஹவத்தை பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.
அந்தத் தீர்ப்பிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பின்னர் அவர்கள் மூவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது.
அத்தீர்ப்பிற்கு எதிராகப் பாதிக்கப்பட்ட தரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவின் விசாரணை கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி நிறைவடைந்ததுடன், பிரதிவாதிகள் மூவரையும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து உயர்நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பிறந்திருந்தது.
எனினும், வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது பிரேமலால் ஜயசேகர நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் வெளிநாடு சென்றுள்ளதாகச் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்தப் பிடியாணையை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டது.
