Main Menu

ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு

எரிபொருள் விலையைக் குறைக்கும் முயற்சியாக, உலக சந்தைகளுக்கு டீசல் விநியோகம் செய்ய ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமையன்று (09) தெரிவித்தார்.

அத்துடன், உக்ரேன் மீதான போருக்கான வருவாயை ரஷ்யா ஈட்டுவதைத் தடுக்கும் நோக்கில் விதிக்கப்பட்டிருந்த ரஷ்ய எரிபொருள் மீதான அமெரிக்கத் தடைகளை அவரது நிர்வாகம் தற்காலிகமாக நீக்கியது.

விவசாயம், வீடுகளை வெப்பமூட்டுதல் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் டீசலின் விலை சாதனை அளவை நெருங்கியுள்ளது.

இது, நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) தங்கள் மெலிதான பெரும்பான்மையை தக்கவைப்பார்களா என்பதைத் தீர்மானிக்கவுள்ள நவம்பர் 3-ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக, ட்ரம்ப்பின் சக குடியரசுக் கட்சியினருக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது.

இந்த அறிவிப்புக்குப் பின்னர் டீசல் விலை குறைந்தபோதிலும், விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க இந்த ஒப்பந்தம் போதுமானதாக இருக்காது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு 3,00,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான டீசலை (இது சுமார் 22.5 இலட்சம் பீப்பாய் எரிபொருளுக்குச் சமம்) ரஷ்யா உடனடியாக விநியோகிக்கும் என்று ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான தனது “மிகவும் வெற்றிகரமான” பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவித்தார். அமெரிக்கா நாளொன்றுக்கு சுமார் 15 இலட்சம் பீப்பாய் டீசலை ஏற்றுமதி செய்கிறது.

அந்தத் தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர், புட்டினின் தூதரான கிரில் டிமிட்ரியேவ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்ட ஒரு செய்தியில் பாராட்டினார்.

கடந்த மாதம் வொஷிங்டனுக்குச் சென்றிருந்தபோது, ​​ரஷ்யாவின் அனைத்து முக்கிய எண்ணெய் நிறுவனங்களுக்கும் அமெரிக்கச் சந்தைக்கு டீசலை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு அமெரிக்க அதிகாரிகளிடம் டிமிட்ரியேவ் கோரியதாக, விவகாரம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

2022-இல் தொடங்கிய போரின் காரணமாக, ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா 2025 ஒக்டோபரில் தடைகளை விதித்தது.

டீசல் ஏற்றுமதி மூலம் ரஷ்யாவிற்குப் பல பில்லியன் டொலர் வருவாய் கிடைக்கக்கூடும்; இது உக்ரேன் மீதான போரைத் தொடர்ந்து நடத்த புட்டினுக்கு உதவக்கூடும்.

போருக்குத் தீர்வு காண்பது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக உக்ரேனிய தூதுக்குழு ஒன்று அமெரிக்காவில் இருந்தபோது அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தை, வலுவான கூட்டாளிகளின் தரப்பில் எடுக்கப்பட்ட ஒரு பலவீனமான முடிவு என்று உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி விமர்சித்தார்.

இந்த ஒப்பந்தம், ட்ரம்பின் சக குடியரசுக் கட்சியாளரான பிரதிநிதி டான் பேக்கன் உள்ளிட்ட அமெரிக்க சட்டமியற்றுபவர்களாலும் விமர்சிக்கப்பட்டது.

அண்மையில் காங்கிரஸ் நிறைவேற்றிய தடைகளை நீக்குவதற்குப் பதிலாக, அவற்றை மேலும் அமுல்படுத்த வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.