உலக விளையாட்டு அரங்கில் புதிய வரலாறு – 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தப்போவது யார்?
2036ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஆரம்பக்கட்டப் போட்டியில் இந்தியா மற்றும் கட்டார் உள்ளிட்ட 7 நாடுகள் களமிறங்கியுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் கட்டாருடன் ஜெர்மனி, ஹங்கேரி, துருக்கி, தென்னாபிரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் சர்வதேச ஒலிம்பிக் குழுவுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.
சர்வதேச ஒலிம்பிக் குழு 2027 மார்ச் மாதத்தில் முதற்கட்டப் பட்டியலை தயாரிக்கும்.
2028இல் முன்னுரிமை பெற்ற நாடுகள் அடையாளம் காணப்பட்டு, 2029ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
இந்தியா முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்த முயற்சி செய்து வருகிறது.
அஹமதாபாத் நகரை மையமாகக் கொண்டு இதற்கான திட்டமிடல்கள் நடைபெறுகின்றன.
அஹமதாபாத் நகரம் 2030 பொதுநலவாய போட்டிகளையும் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்டார், ஒலிம்பிக் போட்டியை நடத்தும் முதல் இஸ்லாமிய பெரும்பான்மை நாடு என்ற பெருமையைப் பெற முயல்கிறது.
தென்னாபிரிக்கா, ஒலிம்பிக் போட்டியை நடத்தும் முதல் ஆபிரிக்க நாடு என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்கப் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் 2036 ஒலிம்பிக் போட்டிக்கான விருப்பத்தைத் தெரிவிக்க விருப்பமுள்ள ஏனைய நாடுகளுக்கு எதிர்வரும் 31ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக 2028 ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரிலும், 2032 போட்டிகள் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடைபெறவுள்ளன.
