இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு
நாடாளுமன்ற வீதியிலிருந்து தேர்தல் ஆணையத் தலைமையகம் வரை ‘இந்தியா’ கூட்டணி நடத்திய பேரணியின்போது டெல்லியில் இன்று (06) பரபரப்பான காட்சிகள் அரங்கேறின.
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர், சில ஆதரவாளர்களுடன் இணைந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை அடையும் முயற்சியாக ஆகாஷ்வாணி பவன் வளாகத்திற்குள் நுழைந்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி பேரணியாகச் சென்ற காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிற நாடாளுமன்ற உறுப்பினர்களை, நிதி ஆயோக் அலுவலகத்திற்கு அருகிலுள்ள நாடாளுமன்றச் சாலையில் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.
மேலும் முன்னேற விடாமல் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் ராகுல் காந்தியும் திரிணாமுல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜியும் காவல் துறை தடுப்பு வேலியின் மீது ஏறினர்.
அதேவேளையில், பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்படுவதற்காக அங்கிருந்த பேருந்து ஒன்றில் ஏற்றப்பட்டார்.
இருப்பினும், சிறிது நேரத்திலேயே அவர் அதிலிருந்து இறங்கி, ஆகாஷ்வாணி நுழைவாயிலில் இருந்த தனது சகோதரருடன் இணைந்தார்.
காவல்துறையினர் தடுத்த போதிலும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் தீபிந்தர் ஹூடா ஆகியோர் வரவேற்புப் பகுதி நுழைவாயில் வழியாக ஆகாஷ்வாணி பவன் வளாகத்திற்குள் நுழைந்தனர்.

பின்னர் அவர்கள் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்ததை சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகள் காட்டின.
பேரணிக்கு முன்னதாக, நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத் தலைமையகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் தடுப்புகளும் செய்யப்பட்டிருந்தன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரத் தொடங்குவதற்கு முன்பே அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
தேர்தல் ஆணையத் தலைமையகமான நிர்வாச்சன் சதனை நோக்கிப் புறப்படுவதற்கு முன்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் மகர் துவாரில் கூடினர்.
பேரணிக்கு முன்னதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தியதுடன், வாக்காளராகப் பதிவு செய்வதற்கான சட்டப்பூர்வ விண்ணப்பமான படிவம் 6-இல் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டி, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை வலுப்படுத்தினர்.
