இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி, அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கியப் பேரணியை திங்களன்று (05) காலை ஆரம்பித்தனர்.
அண்மைய மாதங்களில், 73 வயதான இம்ரான் கானின் உடல்நலம் குறித்த கவலைகள் வலுத்துள்ளன.
சிறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதால், அவரது வலது கண்ணின் பார்வையில் பெரும்பகுதியை அவர் இழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
100-க்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்கொண்டு வரும் கிரிக்கெட் நட்சத்திரமும் அரசியல்வாதியுமான இவர், கடந்த ஆண்டு ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
எனினும், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று இம்ரான் கான் குறிப்பிட்டு வருகிறார்.
சிறையில் இருந்தபோதிலும், பாகிஸ்தான் அரசியலில் அவர் தொடர்ந்து ஒரு முக்கிய சக்தியாகத் திகழ்கிறார்.
அவருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டங்கள் கடந்த காலங்களில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வன்முறைக்கும், கடுமையான ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கும் வழிவகுத்துள்ளன.
இஸ்லாமாபாத்திலிருந்து 275 கி.மீ தொலைவில் உள்ள லக்கி மர்வாத் (Lakki Marwat) நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தப் பேரணி, இரவு வேளையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இது திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி நண்பகல் அளவில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்திற்கும் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (PTI) கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை அனுமதிப்பதற்காக, முதலில் கடந்த வாரமே நடைபெறவிருந்த இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமல் முட்டுக்கட்டையில் முடிந்தன.
அரசு ரகசியங்களை வெளியிட்டது முதல் அரசுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை விற்றது வரையிலான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இம்ரான் கான், முதன்முதலில் 2023 ஆகஸ்ட் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு அவரோடு அவரது மனைவி புஷ்ரா பிபியும் சிறையில் அடைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
