தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்
தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் கியனேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்தி, சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இன்று (04) மும்பையில் கூட்டாகப் போராட்டப் பேரணியை நடத்தினர்.
‘விராட் கர்ஜனா மோர்ச்சா’ (பெரும் கர்ஜனைப் பேரணி) என்று பெயரிடப்பட்ட இந்தப் பேரணி, தெற்கு மும்பையில் உள்ள மெட்ரோ சினிமா பகுதியிலிருந்து தொடங்கி, பிரஹன்மும்பை மாநகராட்சித் தலைமையகத்தை நோக்கிச் செல்லும் வகையில் அமைந்திருந்தது.
காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான என்சிபி (எஸ்பி) ஆகியவற்றின் மாநிலத் தலைவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
வாக்காளர் பட்டியலின் ‘சிறப்புத் தீவிரத் திருத்த’ (SIR) நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் பதவி விலக வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
மும்பையின் சிவாஜி பூங்காவில் தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமாருக்கு எதிராக ‘ஜெய்ல் பரோ அந்தோலன்’ (சிறை நிரப்பும் போராட்டம்) என்ற போராட்டத்தை ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ நடத்திய இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்தப் பேரணியும் நடைபெற்றுள்ளது.
