Main Menu

நாட்டில் தொடரும் கனமழை: பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாகப் பல பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஈரவலயப் பகுதிகளில் மழைவீழ்ச்சி குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பைக் காட்டியுள்ளதாக அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

பதிவாகியுள்ள மழைவீழ்ச்சியின் அடிப்படையில், நில்வளா, கிங் கங்கை, களு கங்கை, மகாவலி கங்கை, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் களனி மற்றும் மகாவலி கங்கையைச் சார்ந்த மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 150 மி.மீ.க்கு நெருங்கிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்நிலைமை குறித்து நீர்ப்பாசன திணைக்களம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளதுடன், வெள்ள எச்சரிக்கைகள் குறித்துப் பொதுமக்களுக்குத் தொடர்ந்து அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது மகாவலி கங்கையைச் சார்ந்த நாவலப்பிட்டி பகுதிகளில் பெருவெள்ள நிலை ஏற்படும் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதற்கமைய நாவலப்பிட்டி, பேராதனை மற்றும் கம்பளை உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், களனி கங்கையைச் சார்ந்து நோர்வுட், கித்துல்கல மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால்; அவிசாவளை, கித்துல்கல, யட்டியாந்தோட்டை மற்றும் நோர்வுட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்தனகலு ஓயாவைச் சூழ தற்போது சாதாரண நீர்மட்ட உயர்வே காணப்பட்டாலும், மழைவீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியக்கூறு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

களு கங்கையைச் சார்ந்து இரத்தினபுரி, மில்லகந்த, மகுர ஓயா ஆகிய பகுதிகளின் நீர்மட்டத்திலும் குறிப்பிடத்தக்களவு உயர்வு காணப்படுவதுடன், சில இடங்களில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் புலத்சிங்கள, பாலின்தநுவர போன்ற குடா கங்கையைச் சார்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், களு கங்கையைச் சார்ந்து இரத்தினபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், அப்பகுதி மக்களும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நில்வளா மற்றும் கிங் கங்கையின் மேல் படுகைப் பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால்; தவலம, ஹினிதும, நாகொட ஆகிய பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நில்வளா கங்கையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால், அக்குரஸ்ஸ மற்றும் பிடபத்தர ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைக்கு ஏற்பத் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் எதிர்வரும் நாட்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.