Main Menu

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயிரிழப்பு

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர்.

மற்றொருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

இன்று (20) அதிகாலை சுமார் 5 மணியளவில் இந்த விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதிவேகமாகச் சென்றதால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கருப்பு நிற பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று, பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக கடலோரச் சாலைக் கட்டுப்பாட்டு அறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தினை அடுத்து காரில் இருந்த நால்வரும் உடனடியாக அருகிலுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான நாயர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களில் மூவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவர்களில் ஷனாய் கஜ்ஜல் (21) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுமார் 25 வயது மதிக்கத்தக்க மற்றொரு ஆண் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாகனத்தில் இருந்த நான்காவது நபரான, அடையாளம் தெரியாத சுமார் 20 வயதுடைய ஆண் ஒருவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்துக் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.