அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர் திருமணமான 17-வது நாளில் உயிரிழப்பு
அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் திருமணமான 17-வது நாளிலேயே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம் லோவெல் நகரில் வசித்து வந்தவர் 28 வயதான முகமது ஜாபர் ஹுசைன். இவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர். 2021-ல் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற முகமது ஜாபர், படிப்பை முடித்த பின்னர் அங்கேயே சிவில் இன்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு அவர் வீட்டிலுள்ள படுக்கை அறையில் இறந்த நிலையில் கிடந்தார். அவருக்கு எப்படி மரணம் ஏற்பட்டது என்ற காரணம் தெரியவில்லை. இந்நிலையில் முகமது ஜாபரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவ வேண்டும் என்று மஜ்லிஸ் பச்சாவோ தஹ்ரீக் (எம்பிடி) அமைப்பின் நிர்வாகி அமானுல்லா கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
