ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வு: இலங்கை குறித்து எழுத்துபூர்வ அறிக்கை, பொது விவாதம் நடத்த ஏற்பாடு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐ.நா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகத்தின் எழுத்துமூலமான புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து பொது விவாதமும் இடம்பெறவுள்ளது.
ஜெனீவா கூட்டத்தொடருக்கு முன்னதாக பல முக்கிய பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த நடவடிக்கைகளை நிறைவு செய்ய அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, நீண்டகாலமாகக் கோரப்பட்டு வரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்தல், தாமதமாக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான திகதியை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தல் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரங்களைக் கையளுதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகத்தின் எழுத்துமூலமான இலங்கை குறித்த அறிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் பொது விவாதத்திற்கு முகம் கொடுக்கும் வகையில் அரசாங்கம் இந்த நகர்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது சர்வதேசத்தின் கடுமையான அவதானிப்புக்கு உட்பட்டுள்ள யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி விவகாரம் மற்றும் ஏனைய பொறுப்புக்கூறல் விடயங்களை முறையாகக் கையாள்வது குறித்து வெளிவிவகார அமைச்சு ஊடாக விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜெனீவா அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான சரியான திகதியை உறுதி செய்வதற்கான பணிகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது. மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளைக் காணாமலாக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஊடாகக் கையாள்வதற்கும், பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக புதிய நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைப்பது தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் ஆழமான ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த கால ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில், குறிப்பாக மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம், பாதுகாப்புத் துறை முறைகேடுகள் மற்றும் சட்ட அமலாக்கங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து உயர்ஸ்தானிகரகத்தினால் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, கடந்த கால வடுக்களுக்கு நீதி வழங்குதல், சித்திரவதைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்களில் உறுதியான பொறிமுறைகளை ஏற்படுத்த சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வந்தன. அதன் தொடர்ச்சியாகவே, தற்போதைய அரசாங்கம் ஜெனீவா தளத்தில் தனது நிலைப்பாட்டை வலுப்படுத்தவும், சர்வதேச சமூகத்தின் கரிசனைகளுக்குத் தீர்வுகாணும் வகையிலும் இந்த துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் மற்றும் சர்வதேச சமூகத்திடமிருந்து தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் எந்தவித வெளிநாட்டு அல்லது சர்வதேச தலையீடுகளுடனான இணைந்த விசாரணைப் பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 63ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக அரசாங்கம் பல்வேறு உள்நாட்டு நவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ள போதிலும், சர்வதேசத் தலையீடு என்ற எல்லை மீறலை எந்தக் காரணத்திற்காகவும் அனுமதிக்க முடியாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தகவல் மூலம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
