பெல்லன்வில பகுதியில் துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் கைது
பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்த அவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை,துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் மற்றும் அவர் வந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் ஆகிய இருவரே நவகமுவ பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் எனவும், மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கிகளைக் கடத்திய சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 7:45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பெல்லன்வில நடைபாதை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள உணவகமொன்றின் முன்னால் நின்றிருந்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 55 வயதுடைய நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ‘கொஸ் மல்லி’ எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உறவினர் எனப் பதிவாகியுள்ளதாகவும், அவரது எதிர்த்தரப்பினரால் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து பொரலஸ்கமுவ பொலிஸார், கல்கிஸ்ஸ கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல விசாரணைப் பிரிவுகள் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அதன் பலனாக இந்த இரண்டு சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
