பிரான்ஸில் வெப்ப அலையினால் 2,025 பேர் உயிரிழப்பு
பிரான்ஸில் கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி முதல் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக 2,025 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போதைய சூழ்நிலையில் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது தற்காலிகமாக வெப்பநிலை குறைந்திருந்தாலும், இந்த நிலை நீண்ட நாட்கள் நீடிக்காது என Météo-France எச்சரித்துள்ளது. குறிப்பாக தென்கிழக்கு பிராந்தியங்களில் 1ம் திகதி புதன்கிழமை அன்றும் கடும் வெப்பம் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Rhône பள்ளத்தாக்கு, le Languedoc, la Provence மற்றும் la Corse பகுதிகளில் பிற்பகல் நேரங்களில் 30 முதல் 35 பாகை வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், 2ம் திகதி வியாழக்கிழமை முதல் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் பிராந்தியங்களை மையமாகக் கொண்டு இந்த வெப்ப அலை ஆரம்பமாகும் என்றும், méditerranéen கடற்கரை பகுதிகளில் 33 முதல் 35 பாகை வரை வெப்பம் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த அதிக வெப்பநிலை நாடு முழுவதும் பரவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் வார இறுதிக்குள் பெரும்பாலான பகுதிகளில் 30 பாகையை மீறும் வெப்பநிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு பகுதிகளில் 35 பாகையை தாண்டிய கடும் வெப்பம் பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்திலும் நிலையான அதிக அழுத்த வானிலை காரணமாக, பருவகால சராசரியை விட அதிகமான வெப்பநிலை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாக Météo-France மேலும் குறிப்பிட்டுள்ளது.
