“ஈரான் – அமெரிக்கா அமைதி உடன்பாட்டில் இஸ்ரேல் சூழ்ச்சியை இந்தியா கண்டிக்க வேண்டும்” – மு.வீரபாண்டியன்
“அமெரிக்கா – ஈரான் அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் நோக்குடன் இஸ்ரேல் சூழ்ச்சியுடன் செயல்படுவது, மேற்காசியாவின் அமைதியை பாதிக்கும். இஸ்ரேலின் நடவடிக்கையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் மத்தியஸ்த முயற்சியாலும், உலக சமாதான சக்திகளின் போராட்டத்தின் காரணமாகவும், அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த அமைதி உடன்பாட்டின் தொடர்ச்சியாக, அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே ஸ்விட்சர்லாந்தில், பாகிஸ்தான், கத்தார் நாடுகளின் மத்தியஸ்துடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. அதை சீர்குலைக்கும் உள்நோக்கத்தோடு, ஈரானின் நட்பு நாடான, லெபனான் மீது இஸ்ரேல் ராணுவத் தாக்குதல் நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது.
இந்நிலையில், அமைதி உடன்பாட்டை சீர்குலைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது” என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
